Thursday, January 31, 2008

கருட சேவை -4

Visit BlogAdda.com to discover Indian blogs
கஜேந்திர மோக்ஷம்


( அஸாம் மாநிலம் கவுகாத்தியில் எடுக்கப் பட்ட படம். பெருமாளை பூரி ஜகந்நாதரைப் போல் அமைத்துள்ளதை கூர்ந்து பார்த்தால் கவனிக்கலாம்.)

விசிஷ்டாதவைத்தின் மைய கருத்தே பூரண சரணாகதிதான் அந்த சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோக்ஷம். ஜீவாதமாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு சம்சாரமாகிய குளத்தில் உள்ள துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன் "ஆதி மூலமே" என்று அலறிய அடுத்த கணமே வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்து கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்த பகதவத்சலன். ஆகவே பூரண சரணாகதியை விளக்குவதே இந்த கஜேந்திர மோக்ஷம்.


எல்லா வைணவத்தலங்களிலும் பௌர்ணமியன்று கருட சேவையுடன் கஜேந்திர மோக்ஷம் சிறப்பாக நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் சித்ரா பௌர்ணமியன்றும் பல் வேறு தலங்களில் ஆனி கருடன், ஆடி கருடன் என்று அந்தந்த மாதங்களில் பௌர்ணமி தினங்களிலும் கருட சேவையுடன் கஜேந்திர மோட்சம் சிறப்பாக நடைபெறுகின்றது. பெருமாள் கருட சேவை தரும் மற்ற சமயங்கள் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள், மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகும்.


இனி பாகவதத்தில் கஜேந்திர மோக்ஷம் எவ்வ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போமா? கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான் , முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது .உடனே த்னது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான் ஒரு குடும்பத்தலைவனைப் போல பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.


பின்னிருந்து மற்ற பெண் யானைகளும், குட்டிகளும் சேர்ந்து இழுத்தன் ஆனால் முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகமல்லவா? இந்த இழுபறி நீடித்தது. ஆயிரம் வருடங்கள் இந்த இழுபறி நீடித்தது. தேவர்கள் எல்லாரும் கூடி நின்று இந்த போராட்டத்தை கண்ணுற்றனர். மெள்ள மெள்ள கஜேந்திரன் தன் சக்தி குறைந்து வருவதை உணர்ந்தான், மற்ற பிடிகள் எல்லாம் இனி பயனில்லை என்று கஜேந்திரனை விட்டு
வீடு வரை மனைவி
வீதி வரை உறவு
காடு வரை பிள்ளை
என்று ஓடிவிட்டன, கஜேந்திரன் தன் துர்கதியான நிலையை உணர்ந்தான், மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில் அந்த பரம் பொருளைத் தவிர தனக்கு எந்த பற்றுக் கோடும் இல்லை என்று உணர்ந்தான். முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதி மூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்தான். அந்த ஸ்தோத்திரத்தின் சாரம் பரம புருஷனே உனக்கு நமஸ்காரம், உன்னிடமிருந்துதான் சகலமும் தோன்றியது, அனைத்துக்கும் ஆதாரம் நீயே, அனைத்தும் உன்னுள்ளே அடக்கம், உன்னுடைய மாயையினாலே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன, சில ஒளிர்கின்றன, சில அழிகின்றன. பிரளய முடிவில் அனைத்து உயிர்களும் அழிய ஆலிலை மேல் துயில் கொள்ளும் மாயனும் நீயே. உன்னை விட்டால் எனக்கு வேறு பற்றுக் கோடு யாருமில்லை, உன் சரணமே சரணம். ஆதி மூலமே! என்று தாமரைப் பூவை தனது தும்பிக்கையில் வைத்துக் கொண்டு அலறியது கஜேந்திரன்.







கஜேந்திரனனின் அந்த அபயக்குரல் கேட்டவுடனே பெருமாள் வேத சொருபனான ஓடும் புள்ளேறி ( கருடனில), கையில் சுதர்சன சக்கரத்துடன் விரைந்து வந்து சக்கராயுத்தால் முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோக்ஷமும் அளித்தான் அந்த பக்த வத்சலன்.
உங்களுக்கு சில சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் அதற்கான விடைகள் இதோ.


முதலாவது அத்தனை யானை கூட்டத்தில் கஜேந்திரனை மட்டும் முதலை இழுக்க காரணம் என்ன?
முற்பிறவியில் யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யனாக பிறந்து மஹா விஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்துருந்தான். ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். பூஜையில் ஈடுபட்ட மன்னன் முனிவரை வெகு நேரம் காக்க வைத்து விட்டான். அதனால் கோபமடைந்த துர்வாசர், என்னை மதிக்க்காமல் மதம் கொண்டு நடந்த நீ , மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் கொண்ட பக்தி தொடரவேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே வரம் கொடுத்து அந்த மஹா விஷ்ணுவாலேயே உனக்கு மோக்ஷம் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார்.


இனி முதலை , முற்பிறவியில் அவன் கூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்கு கால் கழுவ வருபவர்களின் காலை பற்றி இழுத்து விளையாடும் வழக்கத்தை கொண்டிருந்தான். ஒரு சமயம் தேலவர் முனிவரின் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் அவனுக்கு தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்ட மஹா விஷ்ணுவின் சுத்ர்சன சக்கரம் பட்டு உன்க்கு சாப விமோசனம் ஏற்படும் என்று சாப விமோசனம் அளித்தார்.


கஜேந்திரன் ஏன் ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான் ஏன் முதலிலேயே சரணாகதி அடைந்திருக்கக் கூடாது. மனித மனம் இவ்வாறு தான் உள்ளது. சம்சார மாயையில் மயங்கி நாம் ஏதோ நாம் தான் நமது உறவினர்களைத் தாங்குவது போல் மாயையில் உழல்கின்றோம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்து எப்போது நாம் பூரண சரணாகதி அடைகின்றோமோ அப்போது தான் அவன் அருள் நமக்கு கிட்டும்.


பெருமாள் ஏன் ஆயிரம் வருடம் காத்திருக்க வேண்தும் உடனே வந்து காத்திருக்கக் கூடாதா? அது வரை கஜேந்திரன் தனது வலிமையின் மேலும் தனது பிடிகள் தன்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும் இருந்ததால்தான் பகவான் தனது பஞ்சாயுதங்களுடன் எப்போதும் தன் பக்தர்களைக் காப்பாற்ற தயாராக இருந்தாலும் அவன் உண்மையை உணரும் வரை காத்திருந்தார்.
ஏன் தானே வந்திருக்க வேண்டும் சுதர்சன சக்கரத்தை அனுப்பியிருந்தாலும் பணி முடிந்திருக்குமே , அவரது சௌலப்பியத்தையும், ப்கத வத்சல குணத்தையும் காட்டவேதான்.

பாகவதத்தில் அந்த அருமையான ஸ்தோத்திரங்கள் உள்ளன அவற்றை காலையில் ஒதுபவர்களுக்கு சகல வித நன்மைகளும் கிடைக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதற்கு இணையானது அது. பூரண சரணாகதி அடைந்த கஜேந்திரனை பெருமாள் காப்பாற்றியதைப் போல் மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று அவன் அடி சரணடையும் தன் பக்தர்கள் அனைவரையுன் அவர் காப்பாற்றுவார் என்பதே இந்த கஜேந்திர மோக்ஷம் நமக்கு உணர்த்தும் பாடம்.


இனி இந்த கஜேந்திர மோக்ஷத்தை ஆழ்வார்கள் எப்படி பாடியுள்ளனர் என்று பார்ப்போமா?

தாழைத் தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கைவாய்
வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழந் துயர்கெட விண்ணோர் பெருமானாய்
ஆழிப்பணி கொண்டானாலின்று முற்றும்
அதற்கருள் செய்தானாலின்று முற்றும்.


என்று கோபியர்கள் யசோதையிடம் சென்று கண்ணன் மேல் குற்றம் கூறுவது போல் உண்மையில் அவரது பெருமையைப் பாடுகின்றார் பெரியாழ்வார்.


பெண்ணுலாம் சசடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான்
எண்ணிலாவூழியூழி தவம்செய்தார்வெள்கிநிற்ப
விண்ணுளார் வியப்பவந்து ஆனைக்கருளையீந்த
கண்ணறா உன்னையென்னோ? களைகணாக்கருதுமாறே
.


என்று பிரமனுக்கும் சிவனுக்கும் கிடைக்காத பாக்கியத்தை யானைக்கு அருளியதை போற்றுகின்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.


மீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த
கானமர் வேழம் கையெடுத்தலறக் கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.


என்று பெருமாள் கஜேந்திர வரதராகவும், கரி வரதராகவும் வரத ராஜராகவும் போற்றப்படுவதை பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.

Wednesday, January 30, 2008

எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!

Visit BlogAdda.com to discover Indian blogs


சொல்லுவன்சொற்பொருள்தானவையாய்ச்
சுவைஊறுஒலிநாற்றமும்தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன்நாரணனுக்கு இடந்தான்
தடம்சூழ்ந்துஅழகாயகச்சி
பல்லவன்வில்லவனென்றுஉலகில்
பலராய்ப்பலவேந்தர் வணங்குகழல்
பல்லவன் மல்லையர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.



திருமங்கையாழ்வார் பாடிய ஒரு பாசுரம், அந்த பரம் பொருளையே பாடிய ஆழ்வாரே அந்த ஆண்டவனுக்கு பணி புரியும் அன்பர்களை போற்ற வேண்டும் என்று பல்லவன் பரமேஸ்வரனை பாராட்டி காட்டியுள்ளார்.

எதற்காக இந்த பீடிகை என்று ஆச்சிரியப்படுகின்றீர்களா? வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக செயல்படும் சீனா ஐயா அசை போடுவது அவர்கள் ஆன்மீகப் பதிவாளர்களை அடையாளம் காட்டியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி கூறத்தான்.

அவருக்கு மட்டுமா நன்றி ? சிவமுருகனுக்கும் தான். பிளாக எப்படி உருவாக்குவது, Unicode என்பது என்ன என்று தெரியாத போது, அவரது பிளாக் மதுரை கண்டு அவருக்கு மின்னஞ்சல் அனுப்பிய போது அதற்கு உடனடியாக பதில் கொடுத்து பிளாக் எழுத உதவிய குருநாதர் அவர் . அவருக்கும் நன்றி.

சக தொண்டர்களுள் "வாரம் ஒரு ஆலயம்" நடராஜன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. ஐயனின் புகழை அனைவரிடத்தும் பரப்ப "கற்றலில் கேட்டலே நன்று" என்று podcast வழியை தேர்ந்தெடுத்ததற்காக.

அடுத்து "மாதவிப்பந்தல்" கண்ண பிரான் ரவி ஷங்கர் (KRS) மாதவிப் பந்தல் அவர்கள் தமிழ் இவர் கையில் மட்டும் எப்படி அப்படி வளைந்து கொடுக்கின்றது என்று ஆச்சிரியப்படவைக்கும் பதிவுகள் அத்தனையும் அருமை.

"ஆழ்வார்க்கடியான்" N. கண்ணன் ஆழ்வார்க்கடியான்ஆழ்வார்களின் வேத சாரத்தை அழகிய தமிழில் இயம்பும் அன்பர்.

ஐயனின் திருக்கயிலாய யாத்திரை மற்றும் ஆனந்தக் கூத்தரின் தில்லை அம்பலத்தை அருமையாக ஆராய்ந்து எழுதும் கீதா சாம்பசிவம் ஆன்மீகப் பயணம் அவர்களுக்கும் நன்றி.

மற்றும் தமிழில் பதிவு இடும் குறிப்பாக ஆன்மீகப்பதிவு இடும் அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. அடியேனுடைய பதிவுகளில் படங்கள் அதிகமாக உள்ளதாக சிலர் குறிப்பால் உணர்த்தினர். ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாததை ஒரு படத்தால் உணர்த்தி விடலாம் என்பதால்தான் படங்களை அதிகமாக பயன்படுத்துகின்றேன். நாம் வீட்டில் இருந்தே ஆண்டவனை வணங்கலாம் என்றாலும் திருக்கோவில்களுக்கு செல்வது அவரது திவ்ய தரிசனத்தைப் பெறுவதற்காகத்தானே. என்வே "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்று படங்களை அதிகம் பயன் படுத்தினேன் இனி குறைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றேன். பதிவுகளில் பெரும்பாலக என்னுடைய படங்களையே பயன்படுத்துகின்றேன் ஆயினும் சில சமயங்களில் மற்ற பதிவர்களின் படங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றேன் (சுட்டு) அதாவது அவர்கள் அனுமதி பெறாமல் . அதற்காக மன்னிப்பும் அதே சமயம் நன்றியும்.

ஆன்மீகப் பதிவுகள் ஆனாலும் க்டல் கடந்து சென்ற பின்னும் வந்து த்ரிசித்து பின்னூட்டமும் இட்டு மேலும் எழுத உற்சாகம் அளித்த அன்பர்களுக்கும், வந்து தரிசித்த அன்பர்களுக்கும் நன்றி.


பாராட்டிய சில அன்பர்கள்:



வடுவூர் குமார் கட்டுமானத்துறை
குமரன் கோதை தமிழ்
என்றும் அன்புடன் பாலா தமிழ் உலா
துளசி கோபால் துளசி தளம்
அபி அப்பா அபி அப்பா
T.R.C கௌசிகம்
மதுரையம்பதி மதுரையம்பதி
expatguru Madras Thamizhan
VSK ஆத்திகம்
kalyanji பகவத் கீதை
கோவி.கண்ணன் கோவி கண்ணன்

நிறைவாக ஒரு வேண்டுகோள் அன்பர்களே குறைகள் ஏதாவது கண்ணில் பட்டால் அதைக் கட்டாயம் சுட்டிக் காட்டுங்கள் அவற்றை திருத்திக் கொள்வதற்காக.


அடியேன் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பற்றி ஒரு நூல் தமிழில் எழுதியுள்ளேன் அதன் பிரதியும், யாத்திரையின் - Videoம் வேண்டும் அன்பர்கள் மின்னஞ்சல் அனுப்பினால் அனுப்பி வைக்கிறேன்.


அன்பன்
(கைலாஷி)
சு.முருகானந்தம்
muruganandams@rediffmail.com

Tuesday, January 29, 2008

கருட சேவை - 3

Visit BlogAdda.com to discover Indian blogs
பெரியாழ்வார் வைபவம்


கருடன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகள் இரண்டு முதலாவது விஷ்ணு சித்தர் பொற்கிழி பெற்று யானையின் மேல் நகர்வலம் வரும் போது பெருமாள் பெரிய பிராட்டியுடன் வரும் போது அவருக்கு கண்ணேறு பட்டுவிடுமோ என்று பயந்து பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடியது. இரண்டாவது கஜேந்திர மோட்சம் இந்தப் பதிவில் பெரியாழ்வார் வைபவத்தைப் பற்றிப் பார்ப்போம்.


பெரியாழ்வார் என்னும் விஷ்ணு சித்தர் கருடாம்சமாய் பிறந்தவர். பெருமாளுக்கு திருப்பல்லாண்டு பாடியவர் இவரே. . ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வடபெருங்கோயிலுடையானுக்கு (வடபத்ர சாயிக்கு) நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார் பெரியாழ்வார். இவரே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், ஆண்டாள் நாச்சியாரை வளர்த்து அரங்கனுக்கே மாமானார் ஆகும் பேறு பெற்றார்.


அப்போது கூடல் நகராம் மதுரையை ஆண்டு வந்த வல்லப தேவன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சடசு நடதினான். அதில் அவன் " யார் முழு முதற் கடவுள்" ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்தான். அதற்கு பரிசாக தங்க நாணயங்கள் அடங்கிய பொற்கிழி ஒன்றை தனது தவத்திறமையினால் எந்த வித பிடிப்புமில்லாமல் ஆகாயத்தில் தொங்க விட்டான். தனது கேள்விக்கு யார் சரியான விடை அளிக்கின்றார்களோ அவரது காலடியில் இந்த பொற்கிழி தானாக விழும் என்றும் அறிவித்திருந்தான்

விஷ்ணு சித்தர் கனவிலே பெருமாள் தோன்றி அவரை சடசில் கலந்து கொள்ள பணித்தார். இறைவன் ஆணைப்படி விஷ்ணு சித்தர் அஞ்சிக்கொண்டே அந்த சடசில் கலந்து கொள்ள சென்றார். அவர் வால்மீகி, துருவன் போல மயர்வறும் மதி நலம் பெற்று , மிகுந்த திறமையுடன் ஸ்ரீமந் நாராயணனே முழுமுதற் பரம்பொருள் என்று வேதங்கள் ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் இவைகளிலிருந்து ஆயிரமாயிரம் மேற்கோள்கள் காட்டி விளக்கினார்.
.
பொற்கிழி இவர் பக்காம் தாழ வளைய இவரும் அக்கிழியை அறுத்துக் கொண்டு உருவினார். இதனைக் கண்ட அரசன், மற்ற வித்வான்கள் வியந்தனர். வெற்றி பெற்ற விஷ்ணு சித்தரை வல்லப தேவன் தன்து பட்டத்து யானையின் மேல் ஏற்றி, நகர்வலமாக அழைத்து சென்றான். விஷ்ணு சித்தருக்கு பட்டர் பிரான் அல்லது அறிவாளிகளின் தலைவன் என்னும் பட்டம் அளித்து கௌரவித்தான் அரசன்.


பெரிய திருவடியில் பெருமாள் பெரிய பிராட்டியாருடன்


விருது, சங்கம் போன்ற பல வாத்ய கோஷங்களுடன் பட்டத்து யானையின் மேல் நகர் வலம் அழகைக் காண வியப்பூட்டும் வகையில் பரம் பொருளான ஸ்ரீமந் நாராயணன் வானின் மேல் பெரிய பிராட்டியுடன் பெரிய திருவடியான கருடன் மேல் ஆரோகணித்து தன் பரிவாரங்களுடன் நகர்வலத்தைக் காண விழைபவன் போல் காட்சி தந்தார். எம்பெருமானுக்கு எங்கே கண்ணேறு பட்டு தீங்கு விளைந்துவிடுமோ என்று அஞ்சி அன்பு மிகுதியால் விஷ்ணு சித்தர் காப்பாக யானை மீதிருந்த மணிகளைத் தாளாமாகக் கொண்டு , "பல்லாண்டு", "பல்லாண்டு" என்று செய்யுளிசைத்துப் பாடத் தொடங்கினார். இவ்வாறு பரந்தாமனுக்கே பல்லாண்டு பாடியதால் இவர் "பெரியாழ்வார்" என்று அழைக்கப்படலானார்.

கருடனைப் போற்றும் பெரியாழ்வாரின் ஒரு பாசுரம்

நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமுமத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமுந்தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.


அடுத்து கஜேந்திர மோக்ஷ பதிவில் சந்திப்போம்.

கருட சேவை - 2

Visit BlogAdda.com to discover Indian blogs
கருட சரிதம்




மாலாய்ப்பிறந்தநம்பியை மாலே செய்யும்மணாளனை
ஏலாப்பொய்களுரைப்பானை இங்கேபோதக்கண்டீரே?
மேலால்பரந்தவெயில் காப்பான் வினதைசிறுவன்சிறகென்னும்
மேலாப்பின்கீழ்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே
. என்று சூடிக் கொடூத்த சுடர்க் கொடியாள் பாடிய படி எம்பெருமானுக்கு வெயில் படாதபடி தன் பரந்து விரிந்த சிறகால காப்பவன் விநதை சிறுவன் கருடன். கருடன் வைநதேயன் என்றும் அழைக்கப்படுகின்றான். அவனது சரிதத்தை சுருக்கமாக காண்போமா?

சப்த ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர், அவருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. நல்லவளான விநதைக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் அருணன், இளையவன் கருடன். அருணன் சூரியனின் தேரோட்டி. கத்ருவின் மகன்கள் நாகங்கள். ஒரு சமயம் பொறாமையினால் கத்ரு ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் யார் தோற்றுப் போகின்றார்களோ அவ்ர் வெற்றி பெற்றவரின் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை. அந்த போட்டி என்ன ? இந்திரனின் வெள்ளைக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் என்ன என்பதே போட்டி. விநதை தூய வெள்ளை நிறக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் வெள்ளை என்று கூற, கத்ரு கறுப்பு என்று கூறினாள். பின் போட்டி ந்டைபெற்ற போது தந்திரமாக கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து உச்சர்வத்தின் வாலை சுற்றிக் கொள்ளக் க்றுகிறாள். எனவே அவர்கள் பார்த்த போது உச்சர்வத்தின் வால் கருப்பாக தோன்றியது. இவ்வாறு சூழ்ச்சியால தோற்ற விநதை கத்ருவின் அடிமையாக ஆகின்றாள்.

தன் அன்னை , சிற்றன்னைக்கு அடிமையாக சேவை செய்து வருவதைக் கண்டு பொறுக்க முடியாமல் கருடன் தன் அன்னையிடம் அவரது இந்த நிலைக்கான காரணத்தை கூற வேண்டுகிறான். விநதையும் நடந்ததைக் கூறுகின்றாள். கருடன் தன் சிறிய தாயாரிடம் சென்று தன் தாய்க்கு விடுதலை அளிக்குமாறு வேண்டுகின்றான். அலட்சியமாக கத்ருவும் தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வா? உன் தாயை விடுதலை செய்கின்றேன் என்று ஆணவத்துடனும், அந்த காரியம் முடியாதது என்ற நம்பிக்கையுடனும் பதிலிறுக்கின்றாள். தன் தாயின் துயர் தீர்க்க யாரால் முடியாததையும் செய்ய தாயிடம் ஆசி பெற்று புறப்பட்டான் கருடன். இந்திர லோகத்தை தன் பறக்கும் சக்தியினால சுலபமாக அடைந்து விடுகின்றான் கருடன். அமிர்த குடத்தை நெருங்கும் கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. தேவர்களை வெற்றி பெற்று நின்ற கருடனுடன் போரிட இந்திரனே வந்தான், ஆயினும் அவனாலும் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை எய்கின்றான், கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான்.
அமிர்த கலசத்துடன் கருடன்



கருடனின் வீரம், மற்றும் தாய் பாசத்தைக் கண்டு மகிழ்ச்சி கொண்ட இந்திரன் அவனை மெச்சி அமிர்தத்தை கருடனுக்கு தந்து அனுப்புகின்றான். ஆணவத்தால் அறிவிழந்த சிற்றன்னையிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்கி தன்னை பெற்றவளின் வயிற்றை குளிரச் செய்கின்றான் கருடன். அன்று முதல் சிற்றன்னைக்கு துனண சென்ற நாகங்கள் எல்லாம் கருடனுக்கு பகைவன் ஆகின்றன. ஆயினும் தனது தமையனான அருணன் வேண்டிக் கொண்டதற்காக நாகங்களைக் கொல்லாமல் அவற்றை எல்லாம் வென்று தன் உடலில் சிரசுமாலை, காதுக் குண்டலங்கள், தோள் மாலை, கை கங்கணம், கால் சிலம்பு என்று ஆபரணமாக அணிந்து கொள்கிறான் கருடன்.

எந்தப் பறவையும் பறக்காத உயரத்தில் பறக்க கூடியது கருடன். எழிலானது, கம்பீரமானது, கருடனது வலிமை, வீரம், பொறுமை, வேகம்,அழகு,கோபம் ஆகியவ்ற்றுக்கு மெச்சி மஹா விஷ்ணு கருடனை தனது வாகனமாக ஆக்கிக் கொள்கின்றான். அன்று முதல் இன்று வரை அந்த விநதை சிறுவன் மேல் ஆரோகணித்து பெருமாள் நினைத்த நொடியில் தன் பக்தர்கள் இருக்கும் இடம் சென்று அவர்கள் துயர் துடைத்து வருகின்றான்.

* * * * * *


சுவாமி வேதாந்த தேசிகருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தவன் கருடன். வேதாந்த தேசிகர் ஔஷத கிரியில் தனது குரு உபதேசித்த கருட மந்திரத்தை உபாசிக்க கருடன் தோன்றி ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து அர்ச்சா மூர்த்தியான யோக ஹயக்ரீவரையும் அளித்தான். ஹயக்ரீவரை உபாசித்து தேசிகர் ஹயக்ரிவர் அருள் பெற்று ஹயக்ரீவ ஸ்தோத்திரம் இயற்றினார். கருடன் மேல் சுவாமி தேசிகர் இரு ஸ்தோத்திரங்கள் இயற்றியுள்ளார். அவையாவன கருட தாண்டகம், கருட பஞசாசத். இவற்றில் கருடனை போற்றி தேசிகர் பாடிய சில போற்றிகள்

வைநதேயன் - விந்தையின் குமாரன்.
பக்ஷிராஜன் - வேத ஸ்வரூபன்.
கருத்மான் - அழகிய இறகுகளை உடையவன்.
தார்விகாரி - நாகப்பகையோன்.
பத்ரிநாடா - பறவைகளின் யஜமானன்.
ஆசிவிகாரி - நாகங்களின்(விஷ) பகைவன்.
காகேந்திரன் - பறவைகளின் அரசன்.
அருண அனந்தரன்- அருணனின் இளையோன்.
பக்ஷிஇந்திரன் - பறவைகளின் அரசன்.


கருட சேவை இன்னும் தொடரும்.

Monday, January 28, 2008

மோக்ஷமளிக்கும் கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
மஹா விஷ்ணுவிற்கு வாகனமாகவும் கொடியாகவும் விளங்குவது கருடன். புள்ளரையன், பக்ஷி ராஜன், நாகப் பகையோன், சுபர்ணன் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் திருவைகுந்தத்தில் எப்போதும் எம்பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஒரு நித்ய சூரி. எம்பெருமானை தாங்குவதில் முதன்மையானாவ்ர் எனவே வைணவ சம்பிரதாயத்தில் இவர் பெரிய திருவடி என்றழைக்கப்படுகின்றார். மனித முகத்துடன், பெரிய மீசையுடனும், கருடன் போன்ற அலகுடனும், உடல் முழுவதும் எட்டு நாகங்கள் ஆபரணமாக தரித்து , ஒரு காலை முழங்காலிட்டு மடித்தும் மற்றோரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் , இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களைத் தாங்குவதற்காக நீட்டி பெரிய இறக்கைகளுடன் கருடாழ்வாரின் அழகே ஒரு அழகு.






கருடன் மங்கள வடிவினன், வானத்தில் கருடன் வட்டமிடுவதைப் பார்த்தால் சிறந்த சகுனம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. திருக்கோவில்களில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கருடன் வருவது ஒரு நல்ல அறிகுறி. திருமயிலையில் கும்பாபிஷேகத்தின் போது ஒரு தடவை கருடன் வந்து வட்டமிட்டதை அடியேன் தரிசித்துள்ளேன்.


பதினென் புராணங்களுள் ஒன்று கருட புராணம், நீதி விளக்கம், தண்டனைகள், மற்றும் திருத்த்ங்களைப் பற்றியும், மரணத்திற்க்குப்பின் ஆத்மாவின் பிரயாணத்தைப் பற்றியும் கருட புராணம் விளக்குகின்றது,
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இரங்கமன்னார், ஸ்ரீ ஆண்டாளுடன் ஏக சிம்மாதனத்தில் எழுந்தருளுகிறார் கருடன். தேரழுந்தூர் திவ்ய தேசத்தில் எம்பெருமானுடன் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளுகிறார் கருடன்.


எம்பெருமானை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம், மேலும் கருட சேவை இவ்வுலகில் ஜீவாத்மாக்களின் மும்ம்லத்தை போக்கும் இத்தகைய சிறப்புகள் பெற்ற கருட சேவையை எம்பெருமான் தந்தருளியதை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. ஒவ்வொரு பதிவிலும் ஒரு ஆலயத்தின் கருட சேவையும் அது தொடர்பான செய்திகளும் , கருடனைப் பற்றிய ஒரு பாசுரம், கருடனின் மற்ற சிறப்புகளையும் காணலாம் வாருங்கள் கை கூப்பி அழைக்கின்றேன்.

Monday, January 14, 2008

ஆனந்தம் தரும் ஆதித்ய ஹ்ருதயம்

Visit BlogAdda.com to discover Indian blogs
அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என்கின்றது சிலப்பதிகாரம். சூரிய வழிபாடு பண்டைக்காலத்திலிருந்தே நமது பாரத நாட்டில் இருந்துள்ளது. கிழக்கிலே கொனார்க்கிலும், மேற்கிலே மொட்டேராவிலும் தெற்கிலே சூரியனார் கோவிலும் அமைந்துள்ள சூரியர் கோவில்களே இதற்கு சான்றுகள் . சனாதன தர்மமான இந்து மதத்தை அறு சமயங்களாக வகுத்துக் கொடுத்த ஆதி சங்கர பகவத் பாதாளும் சூரிய வழிபாட்டை சௌரமாக வகுத்துக் கொடுத்தார்.



இன்றும் சிவாலயங்கள் அனைத்திலும் நவ கிரக வழிபாடு உள்ளது. நவகோள்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். இவர் ஆதித்யன், பாஸ்கரன், திவாகரன், பானு, ரவி, பிரபாகரன், பரிதி, கதிரோன், வெய்யோன், என்று பல திருநாமங்களால் அழைக்கப்படுகின்றார். உஷா மற்றும் பிரதியுஷா(சாயா) தேவிகளுடன் சூரியன் வணங்கப்படுகின்றார். தமிழ் நாட்டிலே பொங்கல் பண்டிகை நல்ல விளைச்சலுக்கு காரணமான சூரிய தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே கொண்டாடப்படுகின்றது.

பௌதீக சாஸ்திரப்படி சூரியன் மஹா கொதி நிலையில் உள்ள வாயுக்கள் நிரம்பிய கோளமாகும். நமக்கு உணவும், உயிரும் தர தினமும் உதயமாவதாகவும் கருதப்படுகின்றது. சூரியன் இல்லையென்றால் தாவரங்கள் photosynthesis என்று சொல்லப்படும் உணவு தயாரிப்பது இல்லை, தாவரங்கள் இலையென்றால் மான், மாடு முதலிய மிருகங்கள் இல்லை, இம்மிருகங்கள் இல்லையென்றால் சிங்கம் புலி முதலிய மிருகங்கள் இல்லை எனவே சூரிய ஒளியே உலகில் உயிர்களுக்கு ஆதாரம்.



ஆயிரம் கிரணங்களுடன் நம்மை உதய நேரத்தில் பிரம்மா ரூபத்திலும், உச்சிப் போதில் பரமேஸ்வர ரூபத்திலும், அஸ்தமன மாலை நேரத்தில் விஷ்ணு ரூபமாகவும் காப்பதாக ஐதீகம், காலை மற்றும் மாலை சூரியக் கதிரில் விட்டமின்- D இருப்பதாக விஞ்ஞானமும் கூறுகின்றது.




மஹா பாரதத்தில் தர்மர் சூரிய பகவானை ஆராதித்து அக்ஷய பாத்திரம் பெற்றார். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு அந்த காயத்ரியின் சாராம்சம் " தியானத்திற்குரிய சூரிய பகவானுடைய ஒளி எங்கள் உள்ளத்தில் புகுந்து சிந்தனைகளை தூண்டி விடுவதாக என்பதாகும்.

ஸ்ரீ யாக்ஞவல்க்ய மஹரிஷி தான் அருளிச் செய்த ஸ்ரீசூர்ய கவச தோத்திரத்தில் ’தினமணியானவன்’, இரட்சிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.




ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன், சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரஹங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர் இவர். இவருக்குரிய அதி தேவதை - அக்னி, பிரத்யதி தேவதை - ருத்திரன், தலம் - சூரியனார் கோவில், றம் - சிவப்பு, வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம், தான்யம் - கோதுமை, மலர் - -சந்தாமரை, எருக்கு, வஸ்திரம் - சிவப்பு, ரத்தினம் - மாக்கம், அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்.







இனி இந்த சூரிய தேவனுக்குரிய மிக பலம் வாய்ந்த துதியான ஆதித்ய ஹ்ருதயம் எவ்வாறு இராம பிரானுக்கு கும்ப முனி என்று அழைக்கப்படும் அகத்திய முனிவரால் எப்படி உபதேசிக்கப்பட்டது என்பதைப் பார்ப்போமா? யுத்த களத்திலே ராவணனை கடைசியாக எப்படி அழிப்பது என்று யோசித்துக் கொண்டு இராம பெருமான் ன்ற போது , பல தேவர்களுடனும், கந்தவர்களுடனும், ரிஷ’களுடனும் சேர்ந்து இராம இராவண யுத்தத்தை கவனித்துக் கொண்டிருந்த பெரும் சிறப்பு வாய்ந்த கும்ப முனி என்று அழைக்கப்படுபவரும், அம்மையப்பரின் திருக்கல்யாணத்தின் போது வடக்கு திசை தாழ்ந்து தெற்கு உயர்ந்த போது உலகைச் சமப்படுத்த வந்தவருமான அகஸ்திய முனிவர், ராமரிடம் வந்து பேசத் தோடங்கினார் : "பெரும் தோள்வலி படைத்தவனே, இராமா! என்றுமே அழியாத ஒரு இரகசியத்தை உனக்கு உரைக்கின்றேன் கேள். நான் கூறப்போவது ஆதித்ய ஹ்ருதயம் என்கிற துதி. இது சாஸ்வதமானது; புனிதமானது; அழிவற்றது; எல்லா பாவங்களையும் ஒழிக்க வல்லது; எல்லா எதிரிகளையும் அழிக்க வல்லது; மன குழப்பத்தையும், துன்பத்தையும், வேரோடு அறுக்க வல்லது; ஆயுளை வளர்க்க வல்லது; பெறும் சிறப்பு வாய்ந்தது. தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படுபவனும், உலகுக்கே ஒளி தருபவனும், தினம் தவறாமல் தோன்றுபவனுமான உனது இஷ்வாகு குல தெய்வமான சூரியனைப் பற்றிய துதி இது. உலகை மட்டுமல்லாமல் தேவர்களையும் கூட வாழ்விப்பவர் சூரிய பகவான். அவரே பிரம்மா!, விஷ்ணு!, சிவ பெருமான்!, அவரே கந்தன்!, ப்ரஜாபதி!, இந்திரன்!, குபேரன்! அவரே காலன், யமன்!, சோமன்!' வருணன்! அவரே அணைத்து பித்ருக்களும் ஆவார்! அவரே அஷ்ட வஸ"க்கள் ஆவார்! அவரே மருத்துவர் ஆவார்! அவரே மனு!, வாயு!,மற்றும் அக்னி! பருவங்களின் காரணம் அவரே! உலகை உய்வித்து வைத்திருக்கின்ற ஒளியின் இருப்பிடம் அவரே! உலகின் மூச்சுக் காற்று அவரே." என்று தொடங்கி சூரிய பகவானின் பெருமைகளையும், சிறப்புகளையும் வர்க்கும் துதிகளை கீழ் கண்டவாறு

ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்



தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:



ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு



ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்



ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்



ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்



சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி:



ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி:



பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர :



ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர:



ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்



ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந:



வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம:



ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:



நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே



நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:



ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:



நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:



பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம:



தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:


தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே



நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:



ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம்



வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:



ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ



பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு



அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்



ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான்



ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான்



ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்



அத ரவிரவதந் ரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
சிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி

என்று கூறிய அகஸ்திய மாமுனி கூறி இறுதியாக " இரகு குலத்தில் உதித்தவனே! சூரிய பகவானை மேற்கண்ட துதிகளால் போற்றுபவனுக்கு சிக்கலான நேரங்களிலும், சோதனை காலங்களிலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய காலங்களிலும். எந்த துன்பமும் ஏற்படுவதில்லை. தெய்வங்களினாலேயே போற்றப்படுகின்ற அந்த சூரிய பகவானை முணைப்புடன் கூடிய ஒருமித்த மனத்தோடு, மூன்று முறைகள், மேற்கண்ட துதிகளின் மூலமாக வழிபட்டு வருபவன், யுத்த களத்திலே வெற்றியே காண்பான் என்று அகஸ்திய முனிவரால் அருளப் பெற்ற இந்த அற்புத துதியை, மனதை அடக்கியவரும். பேராற்றல் பெற்றவரும் பெரும் தோள் வலி பெற்றவருமான ஸ்ரீ ராமர் சூரிய பகவானை பார்த்தவாறே மூன்று முறைகள் ஜபித்து ராவ€ணை வென்ற இந்த மிகவும் சக்தி வாய்ந்ததும், நம் பாவங்களையெல்லாம் போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக!
* * * * * * *

Friday, January 11, 2008

கூடாரவல்லி

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனுடன்
கூடியிருக்கும் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்

இன்று பெருமாள் கோவில் பொங்கல் மிகவும் தித்திப்பாக இருப்பதேன்?


அப்பா அப்பா ஒர் சந்தேகம்

என்ன ரவி என்ன சந்தேகம் உனக்கு கோவிலுக்கு போயிட்டு வந்தவுடன்?

இன்று பெருமாள் கோவில் பொங்கல் மிகவும் சூப்பராக இருக்குதே ஏம்ப்பா?

அப்பா அப்பா நான் சொல்றேன் அப்பா.

சரி சொல்லு சூரியா.

இன்னைக்கு நெய்யும் முந்திரி திராட்சையும் அதிகம் அதனால் தான் பொங்கல் ரொம்ப நல்லா இருக்கு.

ஒரு வகையில் சரி தான் ஆனால் உண்மையான காரணம் இன்றைக்கு கூடாரவல்லி அதனால் பெருமாளுக்கு சிறப்பு பிரசாதம்.

கூடார வல்லின்னா என்னப்பா?

அது ஒரு சுவையான கதை

கதைன்னா எங்களுக்கு நல்லா பிடிக்குமே சொல்லுங்க அப்பா.

ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்

என்ன நாம் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லணும்.

சரிப்பா

இந்த மார்கழி மாதம் முழுவதும் காலையில் எழுந்து கோவிலுக்குப் போய் என்ன செய்தீர்கள் ரெண்டு பேரும்.

திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருப்புகழ், திருவாசகம் பாடினோம்.

சரி திருப்பாவையை எழுதியது யாரு?

ஆண்டாள் அம்மா.

அவர்கள் கதை உங்களுக்கு தெரியுமல்லவா?

ஆமாம் அப்பா, தன்னையே கோபிகையாக பாவித்து கண்ணணை அடைய பாவை நோன்பு நோற்பதைப் போல் பாடிய பாடல்கள் இவைகள் என்று தாங்கள் தானே சொல்லிக் கொடுத்தீர்கள் அப்பா.

ஆண்டாள் பாவை நோன்பை எப்படி ஆரம்பிக்கராங்க

அப்பா நாம் சொல்றேன்

சொல்லு ரவி

நெய்யுண்ணோம், பாலுண்ணோம் , ஆபரணம் அணியோம் என்று ஆரம்பிக்கராங்க

மிகவும் சரி

அடுத்து என்ன செய்யறாங்கண்ணு நீ சொல்லு சூர்யா

ஒவ்வொருத்தர் வீடாகப் போயி தன் தோழிகளை எழுப்பி பாவை  நோன்புக்கு கூட்டிக்கிட்டுப் போறாங்க.

எல்லோரும் சேர்ந்து எங்கே போறாங்கா?

நந்த கோபன் மாளிகைக்கு கண்ணனைப் பார்க்க போறாங்க.

அங்கே போய் என்ன செய்யறாங்க? நப்பின்னையை சரணடைந்து  கண்ணனை திருப்பள்ளியெழுப்பி சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து எங்களுக்கு பறை தருவாய்ன்னு வேண்டி அந்த பக்த வதசலனின் புகழ் பாடுகின்றனர்.

கண்ணன் அதற்குப் பரிசாக என்ன தருகிறான்?

அந்த மாயக் கண்ணன் தன்னையே தருகின்றான்.

ஆமாம் ஆண்டாளுக்கு தன்னையே கொடுத்து அனைத்து கோபியருடன் கூடி களிக்கின்றான் கோவிந்தன் அதை ஆண்டாள் எவ்வாறு பாடுகின்றாள் , நீ பாடு சூரியா

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
கோபியருடன் கோவிந்தன் கூடி குளிர்ந்து பால் சோறு பொங்கி அதில் நெய் நிறைய விட்டு முழங்கை வரை வழியுமாறு உண்ணும் நாளே கூடார வல்லி.

ஆண்டாள் பெருமாளுக்கு இன்று பொங்கல் படைத்ததால்தான் இன்றைய பொங்கல் இவ்வளவு சுவையாக இருந்ததா?

ஆமாம்

நாராயணன், பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், கண்ணன், மாயன், புள்ளரையன், அரி, மாதவன், கேசவன், தேவாதி தேவன், வைகுந்தன்

அப்பா நாங்களும் சொல்றோமே

முகில் வண்ணன், பங்கய கண்ணன், மணி வண்ணன், விமலன்

அப்பா நானு

சொல்லு ரவி

பூவைப் பூ வண்ணா, நெடுமாலே, மாலே, திருமால், கோவிந்தா, பத்மநாபா,தாமோதரா

மிகவும் சரி

அப்படிப் பாடிய கோபியர்கள் அந்த கோபியர்களுடன் கூடியுருப்பதால் அந்த கண்ணன் மகிழ்ச்சியாக இருப்பதால்தான் பொங்கல் இவ்வளவு தித்திப்பு.

பாவை நோன்பின் ஒரு முக்கிய நோக்கியமான அந்த கண்ணனை கோபியர்கள் கூடியதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதால்தான் பொங்கல் இன்று இவ்வளவு தித்திப்பு.

அந்த பரம்பொருளிடம் நாம் சரணடைந்து விட்டால் நமக்கும் அவன் திருவடி நிச்சயம் என்பதால் நமக்கும் மகிழ்ச்சி எனவேதான் பொங்கல் இவ்வளவு தித்திப்பு.

சூப்பர் அப்பா ஆண்டாள் அற்புதம்.

இதற்குப்பின் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் குறையொன்றுமில்லாத கோவிந்தா உன்னுடைய திருவடிகளே சரணம் என்று பிரதிக்ஞை எடுத்து கொண்டு ஆண்டால் கூடியிருப்பதால் இது கூடாரவல்லி.


இன்று கூடாரவல்லி, ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை அனுபவத்தை சிறுவர்களுக்கு சொல்லும் விதமாய் அமைத்திருக்கின்றேன். குறைகள் இருந்தால் அது என்னுடையது, நிறைகள் அனைத்தும் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாதங்களில் சமர்ப்பணம்.

Labels: , , ,

Monday, January 7, 2008

ஹனுமத் ஜெயந்தி

Visit BlogAdda.com to discover Indian blogs


பெருமாளின் திருவடிகளை எப்போதும் தாங்குபவர்களில் முதல்வர் கருடாழ்வார் அவர் பெரிய திருவடி என்றும், இரண்டாவது மாருதி இவர் சிறிய திருவடி என்றழைக்கப்படுகின்றார்.


சிறிய திருவடியில் மலையப்ப சுவாமி


சூரிய பகவானின் சஞ்சாரத்தை பின்பற்றியே ஓடிக் கொண்டு நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நான்கு கலைகளை கற்ற பேரறிவாளன் ஸ்ரீ இராம பக்த ஹனுமான்.


நேற்று (08-01-08) எடுகக்பட்டப் படங்கள்


ஒரு லட்சத்து எட்டு வ்டை மாலை தேர் அலங்காரம் முன்னழகு


வாயு புதரன், அஞ்சனையின் அருந்தவ புதல்வன் அனுமன். சீதா மாதாவினால் சிரஞ்சிவி பட்டம் பெற்றவன், நித்திய பிரம்மச்சாரி மாருதி.

தேரில் அருள் பாலிக்கும் அனுமன்


அண்ணனால் விரட்டப்பட்ட சுக்ரீவனையும் சீதா தேவியை பிரிந்து அன்னையை தேடி வந்த இராமரையும் நண்பர்களாக்கியவன் சொல்லின் செல்வன் அனுமன்.


அனுமனுக்கு அருள் பாலிக்கும் இராம சீதா லக்ஷ்மணர்


தென்னிலங்கை சென்று தேவியைக் கண்டு கணையாழி கொடுத்து மாதாவின் துயர் தீர்த்து சூடாமணி பெற்று வந்த வீர தீரன் ஹனுமந்தன்



தேரின் பின்னழகு



இலக்குவன் மயங்கிக் கிடந்த போது சஞ்சிவி கொணர்ந்து அண்ணல் துயர் தீர்த்தவன் சங்கடஹரன். யுத்த களத்தில் இராம லக்ஷ்மண்ருடன் தோளோடு தோள் சேர்ந்து போரிட்டு வெற்றி பெற செய்தவன் அனுமன்.



தேரின் ஒரு பக்க அழகு



இராம தூதனாக சென்று இராவணனுக்கு அறம் உரைத்து , கற்பரசி சீதையை கவர்ந்து வந்த பாபத்திற்காக குலமெல்லாம் பூண்டுடனே கரியுமென சாபமிட்டவன் ஆஞ்சனேயன். இலங்கைதனை தன் வாலிலிட்ட தீயால எரித்து அழித்தவன் பஜ்ரங்கபலி.


அஞ்சலி ஹஸ்த அனுமன்





காகுத்தன் அருள் கொண்டு கதையதனை கையில் கொண்டு கஷ்டங்களை போக்கடிக்கும் கர்ம வீரன் சுந்தரன் அனுமன்.



வடை மாலை தேர் ஓளிப்படம்







பட்டாபிராமன் புகழைப் பாடிப் பாடி காலமெல்லாம் பரந்தாமானருளால் பரமபதமளிப்பவன் கதைதனைக் கையில் கொண்து கிங்கிணியை வாலில் கொண்டு ராம் ராம் என்று சொல்லும் ராம பக்தன் அனுமான்.

Sunday, January 6, 2008

ஹனுமத் ஜெயந்தி

Visit BlogAdda.com to discover Indian blogs
அசோக் நகர் கருமாரி திரிபுர சுந்தரி ஆலயம் - சென்னை

ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரம்


தீபாவளியன்று காசியில் அன்னபூரணிக்கு லட்டுத்தேர் போல இவ்வாலயத்தில் அனுமனுக்கு வடைமாலை(1,00,008) தேர். இன்று (08.01.08) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தரிசனம் செய்யலாம்.
விருப்பமுள்ள சென்னைவாசிகள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

சதயநாராயணர் ஆலயம் - சென்னை
வடைமாலை அலங்காரம்





வீணை மீட்டும் கோலத்தில் ஆஞ்சனேயர் வடை மாலை அலங்காரம்


அசோக் நகர் ஹனுமந்த வனம் விஸ்வரூப ஆஞ்சனேயர் வெள்ளி கவசம்
* * * * *


பஞ்ச முக விஸ்வரூப ஆஞ்சனேயர்



சுந்தர வில்லி ஏவ, சூழ்கடல் இலங்கை மேவி
அந்தமில் வீடு நல்கும் ஆயிழை தன்னைக் கண்டு
வந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட
நந்தலில்லாத து‘தன் நம்மையும் அளித்துக் காப்பான்


ஸ்ரீயத்ர யத்ர ரகுநாத -கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத - ஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்


எங்கெங்கெல்லாம் ஸ்ரீ ராமருடைய புகழ் பாடப்படுகின்றதோ அங்கங்கு சிரமேற் கூப்பிய கையுடனும் ஆனந்த பாஷ்பக் கண்ணுடனும் தோன்றுபவர், அரக்கர்களுக்கு யமனைப் போன்றவர் வாயு புத்திரர் , அஞ்சனா தேவியின் மைந்தர், ஜானகி தேவியின் துன்பத்தை துடைத்தவர், வானர தலைவர், அக்ஷய குமரனை மாய்த்தவர், வாயு வேகமும் மனோ வேகமும் படைத்தவர், இந்திரியங்களை வென்றவர், புத்திமான்களிற் சிறந்தவர், ஸ்ரீ ராம து‘தர், அனுமன் என்றும், ஆஞ்சனேயர் என்றும் வழங்கப்படும் மாருதி, இவரே வைணவ சம்பிரதாயத்தில் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகின்றார்.

சிரஞ்žவியான அனுமன் பாரத தேசமெங்கும் பல்வேறு ரூபங்களிலும் வணங்கப்படுகின்றார். சாதாரணமாக ராம பெருமானை கை கூப்பி வணங்கும் கோலத்திலே காட்சி தரும் இவர் சிலதலங்களில் சஞ்žவி மலையை ஏந்திய கோலத்திலும் , மற்றும் சில தலங்களில் கையில் சௌகந்தி மலரை ஏந்திய கோலத்தில் காட்சி தருகின்றார். பிரத்யேகமாக சில தலங்களில் வேறு அற்புதமான கோலத்தில் காட்சி தருகின்றார் அவற்றுள் சில அனந்த் மங்கலம் என்னும் திருத்தலத்தில் த்ரி நேத்ர தச புஜ ஆஞ்னேயர் (மூன்று கண்களும், பத்து கைகளும் கொண்ட வீர ரூபம்), திருக்குடந்தை இராம சுவாமி கோவிலில் உள்ள அனுமன் இராவணுடன் வாதம் செய்வது போல் அருள் பாலிக்கிறார். நாமக்கல் அடுத்த பேட்டையில் அனுமன் உடை வாள் தரித்து காட்சி தருகிறார். படை வீட்டில் உள்ள அனுமன் தனக்கு மிகவும் பிடித்த இராமாயணத்தை வாசிப்பது போல் காட்சி தருகின்றார். திருக்கடிகை என்னும் சோளிங்கரில் தனி மலையில் கையில் சங்கு சக்கரத்துடன் யோக கோலத்தில் சேவை சாதிக்கின்றார். நாமக்கல், சுதீந்திரம், சென்னை நங்கநல்லூர் ஆகிய் தலங்களில் நெடிதுயர்ந்து விஸ்வரூப ரூபத்தில் சேவை சாதிக்கின்றார். திருநள்ளார், திருவள்ளூர் முதலிய தலங்களில் பஞ்சமுக ஆஞ்சனேயாராகவும் நமக்கு அருள் பாலிக்கிறார்.



நளனுக்கு கலியின் கொடுமை நீங்கிய திருத்தலமான திருநள்ளாற்றிலே அமைந்துள்ள நள நாராயணப் பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பஞ்ச முக ஆஞ்சநேய சுவாமியைப் பற்றி அறிந்து கொள்ள என்னுடன் தங்களை சிறிது நேரம் அழைத்து செல்லுகின்றேன் வாருங்கள் . பாண்டிச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் பகுதியில் காரைக்காலிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது இத்தலம். நளனுக்கு நன்னெறி காட்டியதால் நள்ளாறு என்னும் பெயர் ஏற்பட்டது என்பர். மேலும் அரசலாறுக்கும் நு‘லாற்றுக்கும் நடுவில் இருப்பதால் இப் பெயர் வந்தது என்பர். இத்தலத்தில் நளன் தன் கலி தீர நீராடிய நள தீர்த்திற்க்கு எதிரே நள நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கலி தீர்ந்த பின் நள மஹாராஜா வழிபட்டதால் பெருமாளுக்கு இத்திருநாமம். மேலும் ஸ்ரீ நள புர நாயகித் தாயாருக்கும், விஜய கோதண்ட ராமருக்கும் தனி சன்னதி உள்ளது. இத்திருக் கோவிலில் உள்ள பஞ்ச முக ஆஞ்சனேயரைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோமா?




அனுமன், கருடர், வராஹர், ஹயக்ரீவர், நரசிம்மர் என்ற ஐந்து முகங்களைக் கொண்டவராய் இங்கு அருள் புரிகின்றார் மாருதி. மேற்கு நோக்கிய அனுமன் முகமும், கிழக்கு நோக்கிய கருட முகமும், வடக்கு நோக்கிய நரசிம்ம முகமும், தெற்கு நோக்கிய வராஹ முகமும் விளங்க மேலே ஹயக்ரீவ முகத்துடனும், வலது திருக்கரங்களில் சஞ்žவி மலை, மழு, வாள், அமிர்த கலசம் தாங்கி அபய முத்திரையுடனும், இடது திருக்கரங்களில் ஏடு, பாசம், சௌகந்தி மலர், கேடயம். கதை தாங்கி மணியுடன் கூடிய வால் முன்னே தோன்ற நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார் மிகுந்த வரப் பிரசாதியான பஞ்ச முக ஆஞ்சனேயர்.




ஒவ்வொரு முகத்தால் நமக்கு பல வித நன்மைகள் விளைவிக்கின்றார் இவர். அவையாவன,



அனுமன் முகம் : சகல காரிய ஸ்த்தியளித்து, சனித் தொல்லையை நீக்கி, சகல தோஷங்களையும் போக்கி, எதிரிகளை அடக்கி காக்கின்றார்.






நரசிம்மர் முகம் : பில்லி சூனியம் பேய் பயக் கோளாறுகளை நீக்கி , துஷ்ட தேவதைகளை அடக்குகிறார்.






கருடர் முகம்: சரும நோய்களையும், விஷ நோய்களையும் , பழ வினை சம்பந்தப்பட்ட வியாதிகளையும் போக்குகின்றார்.






வராஹ முகம்: தீராத கடன் தீர்த்து செல்வம் பெருகச் செய்கின்றார். ஜுர ரோகம், விஷ ஜுரம், தீர்க்க முடியாத ரோகத்தையும், சகல வினைகளையும் பாவங்களையும் போக்குகின்றார்.






ஹயக்ரீவ முகம் : சகல கலைகள், படிப்பு, வாய் பேசாதிருப்பவர்களுக்கு வாக்கு வன்மை பெற செய்து சகல கலா வல்லவனாக்குகின்றார்.

இவருக்கு வாலில் மணி கட்டி வழிபட்டால் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறுகின்றன, சனிக்கிழமைகள் இவருக்கு மிகவும் உகந்த நாட்கள்.






இவரின் ஜன்ம தினமான மார்கழி அமாவாசை அன்று சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன அன்று அனைவருக்கும் நல்லாசி வழங்க இவர் வெளியே எழுந்தருளுகின்றார்.





திருவள்ளூரிலே பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆலயம் உள்ளது.




அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸ’ந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ
என்று
மாருதியை ஸ்தோத்திரம் செய்து வழிபட நல்ல புத்தி, பலம், புகழ், தைரியம், மனத்திடம், பயமின்மை, நோயின்மை, சுறுசுறுப்பு, சொல் வன்மை, எல்லாம் சித்திக்கும். தூய உள்ளத்தோடு நம் கோரிக்கைகளை இவரிடம் வேண்டிக்கொ காண்டு வடை மாலை, வெண்னை சாற்றுதல், வெற்றிலை மாலை ஆகியவை கொண்டு வழிபட்டால், சூரியனைக் கண்ட பனி போலே நம்முடைய துன்பம் எல்லாம் விலகி விடும்.




ஹனுமத் ஜெயந்தி

Visit BlogAdda.com to discover Indian blogs

ஸ்ரீ ராம ஜெயம்
அனந்த மங்கலம் த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயர்




ஆண்டவனை தொழுவதை விட அவருடைய மெய்யடியார்களை தொழுவது சிறந்த பலனைத் தரும். அத்தகைய சிறந்த ராம பக்தர்தான் ஆஞ்சனேயர், தன் மார்பைக் கிழித்து அதன் உள்ளே ஸ்ரீ ராமனையும் ஸீதாப்பிராட்டியும் வீற்றிருப்பதைக் காட்டிய இந்த ராம பக்தன் அந்த ராம நாமத்திலேயே தானே அடங்கி விடுவதாக உணர்கிறார். எனவே எங்கெங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சிரமேற் கூப்பிய கைகளுடன் ஆனந்த பாஷ்பக் கண்ணுடன் இன்றும் தோன்றுபவர்தான் இந்த சிரஞ்சீவி அனுமன். வைணவ சம்பிராயத்தில் " சிறிய திருவடி" என்று குறிக்கப்படுகிறார் இவர்.



அனுமன் கடலைக் குளம் போல் செய்தவர், அரக்கர்களை கொசுவைப்போல செய்தவர், ராமயணமாகிய சிறந்த மாலையின் ரத்னம் போன்று விளங்குபவர், அஞ்ஜனா தேவியின் ஆனந்தப் புதல்வர், ஜானகியின் துன்பத்தை துடைத்தவர். வாயு வேகமும், மனோ வேகமும் படைத்தவர், இந்திரியங்களை வென்றவர்,புத்திமான்களில் சிறந்தவர் அதனால் தான் கம்ப நாடரும் தமது ராம காதையிலே மாருதியை "சொல்லின் செல்வன்" என்று குறிப்பிடுகின்றார்.அடக்கத்தின் இலக்கணமாகத் திகழ்பவர் அனுமன்.


சஞ்சிவீ மலையைக் கொணர்ந்து , ராமர் மற்றும் லக்ஷ்மணனின் உயிரைக் காப்பற்றியவர், தீக்குளிக்க சென்ற பரதனை முன்னே சென்று காப்பாற்றியவர். தூதுவனாக சென்று சீதாப்பிராட்டியிடம் ராமனைப்பற்றியும், ராமனிடம் ஸீதையின் இருப்பிடத்தையும் கூறி அனுமன் பண்ணிய தூதுத்யம் பூரண பலன் கொடுத்தது. (ஆனால் கிருஷ்ணராக பெருமாள் சென்ற தூது வெற்றி பெறவில்லை ) எனவே தான் திருவள்ளுரில் ராஜ வைத்தியராக பள்ளி கொண்டிருக்கும் வீர ராவகப் பெருமாளைப் பற்றி கூற வந்த திருமங்கை ஆழ்வார் " அந்த அஞ்சனேயனை தூது அனுப்பியவன் தான் இங்கு பள்ளி கொண்டிருக்கின்றான் என்று கூறினார்."

இதையே விளக்கும் ராமாயணத்தின் சிறந்த பகுதியான " சுந்தர காண்டத்தையே" தன்னுள் அடக்கி விட்ட ஒரு பாடல்:


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்று தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்
.


பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு புத்திரன் அனுமன் மற்றொரு பூதமான கடலைத் (தண்ணீர்) தாண்டி ஆகாய வழியில் ஸ்ரீ இராமருக்காக பூமிப் பிராட்டியின் மகள் ஸீதா தேவியைக் கண்டு இலங்கைக்கு நெருப்பு வைத்தார் அந்த இராமதூதன் நம்மை காப்பான் என்று பாடுகிறார் கவிசக்கரவர்த்தி கம்பர்.

பாரத தேசமெங்கும் ஸாங்கூலன்,அஸாத்ய ஸாதகன், ராம தூதன்,கிருபாஸ’ந்து, வாயு புத்ரன்,கபிசிரேஷ்டன்,மஹா தீரன், பஜ்ரங்க பலி, பவனஜன், மஹா பலன், மாருதி, என்று பல் வேறு நாமங்களாலும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார் இவர்.


பொன்னி ந்தி பாயும் தஞ்சை வள நாடு கோயில்கள் நிறைந்த இடமல்லவா? அங்கே காரைக்கால் மற்றும் திருக்கடவூருக்கு இடையிலே அனந்த மங்கலம் என்ற திருத்தலத்திலே ராஜ கோபால சுவாமி திருக்கோவிலிலே, மும்மூர்த்திகளின் அம்சமாக, த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயராக ( முக்கண், பத்து கரங்களுடன்) எழுந்தருளி அருள் பாலிக்கின்ற அனுமனை பற்றி அறிந்து கொள்வோமா?



இராஜ கோபாலர் ஆலயம், அனந்த மங்கலம்

மகிமாலையார் என்ற காவிரியின் கிளை நதியின் கரையில் அமந்துள்ள தலம் தான் ராஜ கோபால சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் மூலவர் ராஜ கோபாலர், ருக்மணி சத்ய பாமா சமேதராக சங்கு, சக்கரம்,சாட்டை, வெண்ணை கொண்டு சேவை சாதிக்கின்றார். இக்கோவில் விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோவிலில்தான் மும்மூர்த்திகளின் அம்சத்துடன், த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயர், மிகுந்த வரப்பிரசாதியாக, தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை தீர்ப்பவராக அருட்க்காட்சி தருகின்றார். அமாவாசையன்று இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமே இவரது அருளுக்கு ஒரு சான்று.


தல வரலாறு :
ராவண வதத்திற்க்கு பிறகு, தேவி žதாப்பிராட்டியை அழைத்துக்கொண்டு ராமபிரான் வரும் போது பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் இறங்கினார். அவர் ராமரிடம் , ராமா இன்னும் ரக்தபிந்து,ரக்த தாக்ஷன் என்ற இரு அரக்கர்கள் ஏழு சமுத்திரங்களுக்கு அப்பால் கடலில் மூழ்கி தவம் செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்களின் தவம் பலித்தால் உலகமே நாசமாகும் எனவே நீ அவர்களைக் கண்டு பிடித்து அழிக்க வேண்டும் என்று வேண்டினார்.


த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயர்



ராமர் பரதனுக்கு வாக்கு கொடுத்தபடி அயோத்தி செல்ல வேண்டி இருந்ததால் அரக்கர்களை அழிக்க அனுமனை அனுப்ப முடிவு செய்தார். அரக்கர்களை வெல்வதற்காக செல்லவிருந்த அனுமனுக்கு, திருமால் ச்ங்கு, சக்கரம் அளித்தார். பிரம்மா கபாலத்தை அளித்தார், சிவ பெருமான் நெற்றிக்கண்னையும், சூலத்தையும், கருடன் சிறகுகளயும் அளித்தனர். இவ்வாறு பத்து கரங்களிலே சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு,பாசம், வில், அம்பு, சாட்டை, வெண்ணை கொண்டு புறப்பட்டார் அனுமன் அசுரர்களை அழிக்க . அசுரர்களை அழித்து வரும் போது பசுமையான மரங்கள் சூழ்ந்த ஒரு சோலையில் தங்கினார் . அவ்வாறு அவர் தங்கி ஸ்நானம் செய்து இளைப்பாறிய இடமே அனந்த மங்கலம் என்பது இத்தல வரலாறு.


அமாவாசை தினம் இவருக்கு மிகவும் உகந்த தினம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவரிடம் வந்து வேண்டி, தங்கள் குறைகள் தீர்த்துச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக, ஹனுமத் ஜயந்தி தினமான மார்கழி அமாவாசை மிகவும் விசேஷம். காலையில் சுவாமியை எல்லாரும் பார்க்கும் படியாக பிரகாரத்திலே ஒரு உயரமான மேடையில் எழுந்தருளப் பண்ணி முதலில் திரு மஞ்சனம் செய்கின்றனர். பின்னர் அலங்காரங்கள் முடித்து அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. இவ்வாறு உயர மாக இவரை எழுந்தருள் செய்வதால் வருகின்ற அனைவரும் சிரமமில்லாமல், பூரண திருப்தியுடன் ஜெய மாருதியை தரிசனம் செய்ய முடிகின்றது. இரவு சிறப்பு அலங்காரத்தில் மின் விளக்கு ஒளியில் ஊர்வலம் வருகின்றார் ஆஞ்சனேயர்.

அனுமன் தன் பக்தர்களுக்கு வருகின்ற கெட்டவைகளை கூட நல்லனவாக ஆக்கித்தரும் தூயவர், சிவ பெருமான் அபிஷேகப்பிரியர், அது போல அனுமன் ஸ்தோத்திரப் பிரியர், எனவே

அவர் கிருபை உண்டாக

ஸர்வ கல்யாண தாதார்ம
ஸர்வ வாபத்கந வாரக்ம
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்சனேயம் நமாம்யகம் என்றும்
துஷ்ட கிரகங்கள் விலக
அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹசாரிணம்
துஷ்ட க்ரஹ வினாஸாய
ஹனுமந்த முபாஸ்மஹே.
என்றும்

காரிய ஸ’த்தி உண்டாக
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம தூத கிருபாஸ’ந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ
என்றும் மாருதியை ஸ்தோத்திரம் செய்து வழிபட நல்ல புத்தி, பலம், புகழ்,தைரியம், மனத்திடம், பயமின்மை, நோயின்மை, சுறுசுறுப்பு, சொல் வன்மை, எல்லாம் சித்திக்கும். தூய உள்ளத்தோடு நம் கோரிக்கைகளை இவரிடம் வேண்டிக்கொண்டு வடை மாலை, வெண்னை சாற்றுதல், வெற்றிலை மாலை ஆகியவை கொண்டு வழிபட்டால், சூரியனைக் கண்ட பனி போலே உங்களின்கஷ்டம் எல்லாம் விலகி விடும். எனவே ஆஞ்சனேயரின் இஷ்ட தெய்வமான ராமனின் அருளோடும் ஆசியோடும் அனந்த மங்கலம் சென்று, அனுமனை வழிபட்டு வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவோமாக.