Tuesday, November 29, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -11

Visit BlogAdda.com to discover Indian blogs
நெஞ்சை அள்ளூம் பம்பா சரோவரம்

முதலில் நவபிருந்தாவனத்தை தரிசனம் செய்து விட்டு அடுத்து சிந்தாமணி லக்ஷ்மி நரசிம்மரையும் தரிசனம் செய்து விட்டு நாங்கள் அடுத்து சென்ற இடம் பம்பா சரோவரம் ஆகும்.
தற்போதைய ஆனேகுந்தி ஹம்பி பகுதியாகிய இந்த பம்பா க்ஷேத்திரத்தை தலைநகராகக் கொண்டு வாலி ஆண்டு வந்ததாக வரலாறு. அமைதி தவழும் இந்த சரோவரின் கரையில் ஆதி காலத்திலிருந்தே தவ சிரேஷ்டர்கள் தவம் புரிந்து வந்துள்ளனர். விஜயநகர சம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்த ஸ்ரீ வித்யாரண்யர் தவம் புரிந்த இடம் இது.


தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி

தருவதற்கொன்றும் இல்லை தலைவனே எனை ஆதரி

என்ற பாடலை தாங்கள் கேட்டிருப்பீர்கள், இப்பாடலில் கூறியுள்ளது போல இராமபிரானுக்காக சுவை மிகுந்த பழங்களை சேர்த்து வைத்திருந்த சபரி அன்னை வாழ்ந்த குகை இக்குளக்கரையில்தான் உள்ளது. அன்னை சமர்பித்த அந்த கனிகளை மிகவும் உவப்புடன் ஏற்றுக் கொண்டார் தாசரதி. சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க தாமரை மலர்களால் நிறைந்து இரம்மியமாக காட்சி தருகின்றது பம்பா சரோவர்.

திருக்கயிலாய மலையுடன் சார்ந்த மானசரோவரைப் போலவே இந்த பம்பா சரோவரமும் பிரம்மதேவரின் மனதில் இருந்து தோன்றிய தடாகம் ஆகும்.

பாரத கண்டத்தில் உள்ள மற்ற மூன்று சரோவர்கள் இராதஸ்தானில் உள்ள புஷ்கர் சரோவர் மற்றும் குஜராத்தில் உள்ள நாராயண சரோவர், பிந்து சரோவர் ஆகும். இந்த தடாகத்தில் எப்போதும் நீர் வற்றுவது இல்லையாம்.

தாமரை மலர்கள் பூத்துக்குலுங்கும் பம்பா சரோவர்
(மானசரோவருக்கு இனையானது)

குளக்கரையில் பிரம்மாண்டமான மரங்கள் உள்ளன நாங்கள் சென்ற சமயம் அருமையான ஆரஞ்சு நிற மலர்கள் பூத்து அருமையான காட்சி அளித்தது. அதிலிருந்து வந்த சுகந்த மணம் அந்த இடத்தின் தெய்வீகத் தன்மையை மேலும் அதிகப் படுத்தியது. ஸ்ரீ வாதிராஜர் தீர்த்த பிரபந்தத்தில் பம்பாவைப் பற்றி குறிப்பிடும் போதுஇது பாபத்தை தலைகீழாக்கி விடும் க்ஷேத்திரம் என்று கூறுகிறார். அதாவது பாபம் என்பதில் உள்ளபாவை எடுத்து இறுதியில் இட்டால் பம்பா என்றாகிவிடும். எனவே பாப பரிஹாரத்திற்கு தலை சிறந்த தலம் இந்த பம்பா க்ஷேத்திரம். இதற்கு “தக்ஷிண காசி” என்ற பெயரும் உண்டு. இந்த சரோவரின் கரையில் சபரி தனது குருநாதர் மாதங்க மஹாரிஷி, ஸ்ரீராமர் வருவார் என்று சொன்ன சொல்லுக்காக அவருக்காக தவம் செய்து காத்திருந்த குகையும், மஹாலக்ஷ்மி மற்றும் சிவபெருமானின் ஆலயங்களும் உள்ளன.

கணேசர்


விஜயலக்ஷ்மி அம்பாள்

இங்குள்ள ஆதிவாசி இனத்தினர் இந்த குகையையும் சரோவரையும் பராமரித்து வருகின்றனர். நாங்கள் சென்ற சமயம், ஒரு லம்பாடிப்பெண், சரோவரின் கரைகளில் விழுந்திருந்த குப்பைகளை கூட்டி கூடையில் அள்ளிக் கொண்டிருந்தார். சீதாப் பிராட்டியாரைக் காணாமல் அலைந்து கொண்டிருந்த சமயம் இங்கு இராமச்சந்திர மூர்த்தி வந்த போது அன்னை சபரி அவருக்கு பாத பூஜை செய்தார். அந்த பாதச்சுவடுகளையும், சபரி இராமர் வரும் வரை காத்திருந்த போது ஹோமம் செய்த ஹோம குண்டத்தையும் இந்த குகையில் தரிசிக்கலாம்.

ஹனுமன்

குகைக்கு அருகிலேயே மற்ற இரண்டு ஆலயங்களும் உள்ளன. இங்கு சிவபெருமானையும் பம்பா தேவியையும் இங்கு தவம் செய்த ஒரு முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இவரது சீடர்கள் இப்போது இந்த ஆலயங்களை பராமரித்து வருகின்றனர். விஜயலக்ஷ்மி அம்மன் சன்னதியின் முன்னே கணேசர் மற்றும் ஹனுமன் அருள் பாலிக்கின்றனர். கருவறையில் அமர்ந்த கோலத்தில் அன்னை அருளாட்சி நடத்துகின்றாள் அலைமகளின் முன்னே அனேகம் சாலக்கிராமங்களும் உள்ளன. இரண்டு ஆலயங்களையும் ஒரு சிறு வாயில் இணைக்கின்றது.


தான் சுவைத்த பழங்களைத் தந்த தாய் சபரி
ஸ்ரீராமருக்கு பாத பூஜை செய்த இடம்


படங்களுக்கு நன்றி

Aalayam Kanden





சிவபெருமானையும் அன்னை மலைமகள் பார்வதியையும் வணங்கி விட்டு வெளியே வரும் போது. ஆசிரமத்தின் முன்னறை சமையல் கூடமாக ( அல்லது வரும் பக்தர்களுக்கு பிரசாதம் படைக்கவோ) மாறியிருந்தாக தோன்றியது. வெளியே வந்து மேலிருந்து பார்த்தபோது ( ஆலயத்திற்கு செல்ல சுமார் பதினைந்து படிகள் ஏறி செல்ல வேண்டும்) சபரி அன்னை நீராடி புனிதப்படுத்திய சரோவர் இன்னும் அழகானதாக தோன்றியது.


பம்பா சரோவரில் தவம் செய்யும் யோகிகள் தமக்கோ அல்லது பிறர்க்கோ உடல் நலம் சரியில்லாத போது வாலி வீழ்ந்த இடத்தில் உள்ள எலும்புகளை எடுத்து வந்து தேய்த்து நிவாரணம் தருவார்களாம். அஞ்சனாத்ரி மலை ஏறி பால ஆஞ்சனேயரை தரிசிக்க வேண்டுமென்பதால் அங்கிருந்து சீக்கிரம் கிளம்பினோம்.

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home