Tuesday, January 24, 2012

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -21

Visit BlogAdda.com to discover Indian blogs
 
 வெள்ளித்தேர் பவனி

 தங்கத்தேர் பவனி 

துங்கபத்ரையை  கடந்தவுடன் ஒய்வெடுக்க விரும்பியவர்களை விடுதிக்கு அனுப்பி விட்டு மற்றவர்கள் ஆலயத்திற்கு விரைந்தோம். நாங்கள் செல்லும் போது மரத்தேர் பவனி முடிந்து விட்டிருந்தது. சுவாமியை வெள்ளித்தேருக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டிருந்தனர். அருமையாக வெள்ளித்தேர் பவனியையும் பின்னர் அதற்கடுத்து தங்கத்தேர் பவனியையும் அதற்குப்பின்னர் நடந்த ஊஞ்சல் உற்சவத்தையும் மனதார வாயு குருதேவருக்கு நன்றியுடன் கண்டு களித்தோம். வேத கோஷத்துடன் ஊஞ்சல் சேவை மிகவும் அற்புதமாக நடைபெற்றது, அதை சேவித்தது மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்தது, அனைத்து  தேவைகளையும் குருதேவர் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்தது. பின்னர் நடைபெற்ற ஆரத்தியையும் சேவித்து மிகுந்த மன மகிழ்ச்சியுடன் விடுதி திரும்பினோம். 

 
ஊஞ்சல் உற்சவம்

யாத்திரையின் மூன்றாம் நாள் காலை மறுபடியும் குரு தேவரை தரிசனம் செய்ய சென்றோம். முதலில்காலையில் குரு நாதருக்கு நடைபெற்ற அபிஷேகத்தையும் பின்னர் நடைபெற்ற    ஆரத்தியையும் சேவித்தோம்.  இன்று தர்ம தரிசன வழியில்  சென்று தரிசனம் செய்யலாம் என்று அந்த வழியாக சென்றோம். அவ்வாறு சென்ற போது ஹனுமனையும் , சிவபெருமானையும் அருகில் இருந்து சேவித்தோம், சிவபெருமானுக்கு அருமையாக வெள்ளிக்கவசம் சார்த்தியிருந்தர்கள்.  பின்னர் தீர்த்த பிரசாதம் சுவீகரித்துக்கொண்டு வெளியே வந்த போது  பின் மண்டபத்தில் வேத கோஷம்  கேட்டது. மூல இராமருக்கும் மற்ற பூஜா மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொண்டிருப்பது   புரிந்தது. உடனே சென்று அங்கு அமர்ந்து அந்த பூஜையில் பங்கெடுத்துக்கொண்டோம்.



 
 மூல மூர்த்திகளுக்கு பூஜை 

பரமபதநாதர் சேவை



 மூல இராமர் சேவை

மூல இராமரையும், பரமபதநாதரையும் அற்புதமாக தரிசனம் செய்தோம். பின்னர் சுவாமிகள் கொடுத்த அட்சதைப் பிரசாதம் மற்றும் குருதேவரின் டாலர் பெற்று மிக மகிழ்ச்சி  அடைந்தோம்.  பின்னர் வெளியே வந்து அடி அளந்து வலம் வந்தோம். மதிய ஆரத்தியும் கண்டோம்,  அருமையான தரிசனம் தந்ததற்கு குருதேவருக்கு மனதார நன்றி தெரிவித்துக்கொண்டு, விடுதிக்கு திரும்பி வந்து, பின்னர் ஆட்டோ பிடித்து மந்திராலயம் ரோடு வந்து மும்பையில் இருந்து சென்னை வரும் மும்பை மெயில் புகைவண்டி மூலம் சென்னை வந்து சேர்ந்தோம். அனைவருக்கும் ஒரே பெட்டியில் படுக்கை  வசதி கிடைத்தது, ஆனால் தனித்தனி இடத்தில் இருந்தது.  சென்னை வந்த பின்   அருமையாக எல்லா  ஏற்பாடுகளும் செய்து அழைத்துச் சென்று அருமையாக தரிசனம் செய்து வைத்த மோகன் அவர்களுக்கும், தனுஷ்கோடி அவர்களுக்கும் மற்றும் உடன் வந்த அனைவருக்கும் நன்றி விடைபெற்றோம்.  இவ்வாறு நவபிருந்தாவனம் மற்றும் மந்திராலயம் யாத்திரை அவனருளால் அருமையாக நிறைவு பெற்றது.  

 
மந்திராலயத்தில்  இன்னும் தரிசிக்க வேண்டிய இடங்கள் பல உள்ளன அவற்றைப் பற்றி சிறிது பார்க்கலாமா?  இந்த குறிப்பை அனுப்பியவர் மாடம்பாக்கம் சங்கர் அவர்கள் அவருக்கு  மிக்க நன்றி.

இதுவரை வந்து  இந்த யாத்திரையை அனுபவித்த அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.  ஹரிவாயு குருவின் அருளால் அனைவரும் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்ற சுகமாக வாழ அவர் தாள் வணங்கி பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

வாழ்க வையகம்                                               வாழ்க வளமுடன்

Labels: , , ,

Thursday, January 19, 2012

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -20

Visit BlogAdda.com to discover Indian blogs
 
 மந்திராலயத்தில் துங்கபத்ரையின் அழகு

சென்ற பதிவில் பிட்சாலயாவின் சிறப்புகளையும், அப்பணாச்சாரியாரின் பக்தியையும் பற்றிப் பார்த்தோம் இப்பதிவில் அங்கு செல்வோமா? தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டு முதலில் அனைவரும் பரிசல் துறை சென்று சேர்ந்தோம். அங்கிருந்து துங்கபத்ரையை அப்பரிசல் மூலம்  கடந்து அக்கரை அடைந்தோம். பரிசலில் பயணம் செய்வதும் ஒரு சுகமான அனுபவமாகவே இருந்து பரிசல்காரர் எங்கு ஆழம் அதிகம் என்று அறிந்து லாகவமாக பரிசலை நடத்திச்சென்றார். மோகன் அவர்கள் கூறியது போல அங்கு வேன் தயாராக இருந்தது. பிச்சாலி மற்றும் பஞ்சமுகி இரண்டும் போக வேண்டும் என்று கூறினோம் அவர்களோ இருட்டி விட்டால் பரிசல் கிட்டாது எனவே பிச்சாலியில் தரிசனத்தை சீக்கிரமாக முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறி அழைத்து சென்றனர். 
பரிசலுக்காக காத்ததிருக்கின்றோம்

  பாதை ஒன்றும் அவ்வளவு நன்றாக இல்லை. வழியில் ஷேர் ஆட்டோக்களில் எவ்வளவு பேரை அடைக்கமுடியுமோ அவ்வளவு பேரை அடைத்துகொண்டு செல்வதைப்  பார்த்தோம். துங்கபத்ரையின்  நீரால் வளமான வயல்கள் இரு புறமும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது. நடு நடுவே  சிறு கிராமங்கள் கண்ணில் பட்டன. இவ்வாறாக பிச்சாலி வந்து சேர்ந்தோம். முதலில் அமைதியாக ஒடும் துங்கபத்ரா நதியில் நீராடினோம். அந்தி சாயும் வேளை ஆகிவிட்டதால் வானம் செம்மைச்சாயம் பூசிக்கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் சிவப்பாக  அடித்துக்கொண்டிருந்தாள் அப்படியே ரம்மியமாக இருந்தது.   தூரத்தில் துங்கபத்ரா பாலம்  அருமையாக காட்சி தந்தது அதில் அப்போது ஒரு புகை வண்டி சென்றது அருமையாக இருந்தது. இந்த யாத்திரையில் நாங்கள்  மூன்று இடங்களில் துங்கபத்ராவில் குளித்தோம், நவபிருந்தாவனத்திற்கருகில், மந்திராலயத்தில் மற்றும் இங்கு பிச்சாலியில், இங்கு இருக்கும் சுழ்நிலை மிகவும் இரம்மியமாக இருந்தது என்பதில் எந்த ஐயமுமில்லை.

 அந்தி சாயும் நேரத்தில் 
துங்கபத்ரையின் அழகு - பிச்சாலி
 துங்கபத்ரா - பிச்சாலி
  
 பிச்சாலாயவில் கோமாதாவிற்கு  பழம் சமர்ப்பணம் 



பின்னர் ஜாபட கட்டேவில் அமைந்துள்ள ஏக சிலா பிருந்தாவனத்தை  வலம் வந்து வணங்கினோம். ஜோதி வடிவாக காட்சி தந்த ஹரி வாயு குருவுக்கு  9 ஜோதி விளக்கேற்றினோம், ஆம் நெய் விளக்கேற்றி அவரவர்கள் குறை தீர, எல்லாரும் இன்புன்றிருக்க   மனதார வேண்டிக்கொண்டோம். அகல், நெய், திரி எல்லாம் நாம் கொண்டு செல்லவேண்டும்.  இன்றும் இரவு நேரங்களில் குருநாதர் ஜோதி ரூபத்தில் காட்சி தருகிறார் என்கிறார்கள்.

ஏக சிலா பிருந்தாவனம்
  அப்பணாச்சாரியாரும் குருதேவரும் 

இந்த பிருந்தாவனத்திற்கு கூரை கிடையாது வெட்ட வெளியில் அமைந்துள்ளது, மூல பிருந்தாவனத்திற்குப் பின் அமைக்கப்பட்ட முதல் பிருந்தாவனம் இது என்பதெல்லாம் இந்த ஏக சிலா பிருந்தாவனத்தின் சிறப்பு.     அந்தி சாயும் அந்த நேரத்தில் துங்கபத்ரா சலசலவென்று ஒடிக்கொண்டிருக்க, பறவைகள் எழுப்பிய கீச், கீச் சத்தமும் சேர்ந்து ஒரு அருமையான தெய்வீக சூழ்நிலையை உருவாக்கியது மனதில் இனம் புரியாத ஒரு அமைதி குடி கொண்டது அப்படியே தியானத்தில் அமர அருமையான இடம்.  பின்னர் அருகில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஹனுமன் மற்றும் சிவலிங்கங்களை தரிசித்தோம். அவ்விடம் நிறைய நாக சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதையும் கண்டோம். மூல ஆல மரம் கீழே விழுந்து விட்டது தற்போது அரசும் வேம்பும் இனைந்து பிருந்தாவனத்திற்கு  நிழல் வழங்கிக்கொண்டு இருக்கின்றது.


 
வியாஸராஜர் பிரதிஷ்டை செய்த ஹனுமன் 
  


அங்கிருந்த அபர்ணாச்சாரியாரின் வம்சத்தில் வந்த ராமசந்திர பதாதா அவர்கள் பிட்சாலயாவின் சிறப்புக்களையும், அபர்ணாச்சாரியார் மற்றும் இராகவேந்திரரின் நட்பையும் பற்றி ஆங்கிலத்தில் அற்புதமாக விளக்கிக் கூறினார். அவர் கூறிய சில செய்திகள்  பரிமளாச்சாரியர் பல கிரந்தங்களை இங்கு அப்பணாச்சாரியாரின் இல்லத்தில் இயற்றி உள்ளார்.  இராகவேந்திரர் பிச்சாலி வந்த போது அபர்ணாச்சாரியார் அவருக்கு தேங்காய் சட்னி அரைத்துக் கொடுத்த ஆட்டுக்கல்லையும், தேங்காய் உரிக்க பயன்படுத்திய கொழுவையும் காண்பித்தார்.  பிட்சாலயாவில் அநேக நாகதேவதைகள் வாசம் செய்வதாக அவர் கூறினார். இராகவேந்திரர் அபர்ணாச்சாரியாரின் இல்லத்தில் மூல இராமருக்கு பூஜை செய்துள்ளார். மற்றும் அவர் பிட்சாலயா வந்த காலத்தில் அபர்ணாச்சாரியாரின் இல்லத்தில் ஒரு பாம்புப் புற்று இருந்ததாகவும் அதில் இருந்த  கரு நாக(ம்) தேவதை குருதேவர் அளித்த பாலை பருகி வந்ததாகவும், தமது பிருந்தாவன பிரவேசத்திற்கு முன் அவர் நாக நடமாட்டம் இருந்தால் மக்கள் துன்பப்படுவார்கள் என்று புற்றை மறைத்து நாகதேவரை சிலையாக பிரதிஷ்டை செய்தாராம் கருணை மிக்க குருநாதர். 

  சுமார் 400 ஆண்டுகள் பழமையான அபர்ணாச்சாரியாரின் இல்லம்,  2009  ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்து இடிந்து விட்டதாம்,  தற்போது  மராமத்து வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன அதனால் அங்கு சென்று குருநாதர் நடமாடிய இடத்தை பார்க்கமுடியவில்லை. பிட்சாலயாவில் தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகின்றது. முதலிலேயே சொல்லி விட்டால் உணவு தயார் செய்து வைக்கின்றனர்.  அவர்களின் தொலைப்பேசி எண் 08532-204108 / 9885853864. 

பஞ்சமுக ஆஞ்சனேயர்

அருமையான ஒரு தரிசனத்திற்குப் பின் பஞ்சமுகிக்கு புறப்பட்டோம். பஞ்சமுகி வந்த போது இருட்டிவிட்டிருந்தது கோவில் சாத்தி இருக்கலாம் என்று அவசர அவசர சென்றோம். இக்கோவில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது இராகவேந்திரர் இங்கு சுமார் 12 ஆண்டுகள் தவம் செய்த பஞ்ச முக ஆஞ்சனேயர் குகை உள்ளது  இந்த குகையில்தான்  பஞ்ச முக அனுமன்  இங்கு பிரத்யக்ஷமாகி  குரு தேவருக்கு  பிரஹலாதன் யாகம் செய்த இடத்தில்  பிருந்தாவனஸ்தர் ஆகுங்கள் என்று கூறியருளினார். மேலும் வேங்கடேசரும், மஹாலக்ஷ்மித் தாயாரும் குருநாதருக்கு இக்குகையில் பிரத்யக்ஷ்யமாகி அருள் புரிந்துள்ளனர். இராகவேந்திரர் பூஜித்த சிவலிங்கமும்  அவர் பிரதிஷ்டை செய்த பிள்ளையாரும், நாகராஜாவும் இங்குள்ளது.  இராகவேந்திரர் தவம் செய்த இடத்தில் ஒரு பிருந்தாவனம் அமைத்துள்ளனர். இங்கு ஒரு பாறையில் பஞ்சமுக ஆஞ்சனேயரும், வெங்கடேசரும், பெரிய பிராட்டியாரும், சிவபெருமானும் பிரத்யக்ஷமாகிய இடங்கள் சந்தனம் மற்றும் மலர் மாலைகளில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவர்களை திவ்யமாக  தரிசனம் செய்தோம். 

பஞ்சமுகி

மயில்இராவணன் யுத்தத்தின் போது  இராம லக்ஷ்மணர்களை கடத்திக்கொண்டு பாதாள லோகத்தில் சிறையில் அடைத்து விட்டான். அவர்களை விடுவிக்க ஹனுமன்   விபீஷணரிடம் மயில் இராவணன் அரண்மணைக்கு எவ்வறு செல்வது என்று கேட்க, அவரும்   இரு வழிகள் உள்ளன ஒன்று இராவணன் அரண்மணை வழியாக செல்வது, இரண்டாவது தண்டகாரண்யத்தின் வழியாக செல்வது. தண்டகாரண்யம் செல் அங்கு எருக்கலாம்பாள் உனக்கு உதவி செய்வாள் என்று கூறினார். அனுமனும் தண்டகாரண்யம் சென்று அம்பாளை வேண்ட அவளும் சந்திரசேனன் என்ற இராமபக்தர் உனக்கு உதவுவார் என்று உபாயம் கூறி அனுப்பினாள். சந்திரசேனன் ஐந்து வண்டுகளில் மயில்ராவணனின் உயிர் நிலை ஐந்து வண்டுகளில் உள்ளதால் அனைத்தையும் ஒரே சமயத்தில் கொல்ல வேண்டுமென கூறினார். எனவே அனுமன்   விஷ்ணு பகவானின் அவதாரங்களைக் கொண்ட பஞ்சமுக ஆஞ்சனேயராக மாறி ஒரே சமயத்தில் ஐந்து வண்டுகளையும்  தின்று மயில்ராவணனை கொன்று   இராம லக்ஷ்மணர்களை விடுதலை செய்தார். இவ்வாறு ஆஞ்சனேயருக்கு எருக்கலாம்பாள் உதவியதால் இன்றும் இக்குகைக்கோவிலின் பின்னர் எருக்கலாம்பாளுக்கு ஒரு சன்னதி உள்ளது. அம்மனுக்கு வளையல் சார்த்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.   

பஞ்சமுக ஆஞ்சனேயரின் ஐந்து முகங்களுள் ஹனுமான் கிழக்கு நோக்கி இருக்கிறார், இவர் மனத் தெளிவைத் தருகிறார். நரசிம்மர் தெற்கு நோக்கியிருக்கிறார், இவர் வெற்றியையும் அஞ்சாமையையும் தருகிறார். மேற்குப் பார்த்த கருடன் தீய சக்திகளையும் விஷங்களையும் நீக்கி அருள்கிறார். வடக்கு நோக்கிய வராஹர் வளமையையும் செல்வத்தையும் நல்குகிறார். வானத்தை நோக்கியுள்ள ஹயக்ரீவர் அறிவையும் நல்ல குழந்தைகளையும் அளிக்கிறார். 

ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக அனுமனை கம்பர் பாடிய பஞ்சபூதப் பாடலால் வணங்குவோமா? 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்று தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்
.


பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு புத்திரன் அனுமன், மற்றொரு பூதமான கடலைத் (தண்ணீர்) தாண்டி ஆகாய வழியில் ஸ்ரீ இராமருக்காக பூமிப் பிராட்டியின் மகள் சீதா தேவியைக் கண்டு இலங்கைக்கு நெருப்பு(அக்னி) வைத்தார் அந்த இராமதூதன் நம்மை காப்பான.

  அருகில் ஒரு சன்னதியில் ஹனுமனின் பாதுகைகள் உள்ளன, கேரேபுதூர் பீமண்ணாவின் கனவில் ஹனுமன் தோன்றி தனக்கு பாதுகைகள் செய்யுமாறு கூறினார், காலின் அளவு எங்கு கிடைக்கும் என்று உணர்த்தினார். காலை அவ்விடத்தில் சென்று பார்த்த போது அஞ்சனை மைந்தனின் காலடித் தடம் இருந்தது. அவரும் அந்த அளவிற்கு பாதுகைகள் செய்து அர்பணித்தார். தினமும் காலையில் அர்சகர்கள் சன்னதியைத் திறக்கும் பொது பாதுகையில் புல், மண் ஒட்டியிருப்பதையும் சிறிது தேய்ந்திருப்பதையும் காண்கின்றார்களாம், ஐந்து வருடத்திற்கு ஒரு முறை புது பாதுகைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன. இரவில் சென்றதால் புஷ்பக விமானம் போன்ற பாறை, மெத்தை தலையணை போன்ற பாறை ஆகியவற்றை காணமுடியவில்லை. கோவிலுக்கு அருகே உள்ள கடைகளில் காரப்பொரி மற்றும்   மசால்பொரி விற்கிறார்கள். அருமையாக இருக்கும் என்று மோகன் அவர்கள் கூறினார்கள். ஆளுக்கொரு பொட்டலம் வாங்கிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டே பரிசல் துறை வந்தோம். அக்கரையில்   மின் ஓளியில் மந்திராலயம் அருமையாக காட்சி தந்தது.  சுமார் 7  மணியளவில் இருட்டில் திக் திக் என்று மனது அடித்துகொள்ள,    துங்கபத்ராவை மனதில் ராகவேந்திரர் துதியுடன் கடந்து சுகமாக இக்கரை அடைந்தோம். 


ஹனுமன் பாதம்

அபர்ணாச்சாரியார் குருதேவருக்கு
சட்னி அரைத்த ஆட்டாங்கல் 

வழியில் ஒரு ஷேர் ஆட்டோ நிறைய மக்கள்

இரவில் தினமும் மர, வெள்ளி, தங்கத்தேர் கோவில் வலம் உள்ளது இப்போது சென்றால் தரிசிக்கலாம் என்று மோகன் அவர்கள் கூறினார்கள். எனவே ஒரு சிலர் கோவிலுக்கு சென்றோம், முடியாதவர்கள் தங்கும் விடுதிக்கு சென்றனர். அந்த அற்புத தரிசனத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.       

Labels: , ,

Sunday, January 1, 2012

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -19

Visit BlogAdda.com to discover Indian blogs
 குரு இராகவேந்திரரும் அபணார்ச்சாரியரும்



அருள் பாலிக்கும் அழகு


 
 இப்படங்கள் எல்லாம் மும்பையைச் சார்ந்த திரு. இராஜன் ஐயர் வரைந்தவை. விநாயகரின் படங்களை வரைவது இவரது தனித்தன்மை. இவரது மற்ற படங்களைக் காண   Rajandraws  செல்லவும். 


அருமையாக குரு ராகவேந்திரரை தரிசனம் செய்து விட்டு, பின்னர் மந்திராலயத்தில் நடைபெறும் அன்னதானத்தில் மதியம் பிரசாதம் சுவீகரித்துக் கொண்டு  தங்கும் விடுதிக்கு திரும்பி வந்து பிச்சாலிக்கும் பஞ்சமுகிக்கும் செல்ல கிளம்பினோம். இவை இரண்டும் துங்கபத்ரையின் மறு கரையில்  கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளன.  பிச்சாலி மந்திராலயம் ரோட்டிலிருந்து 15 கி.மீ தூரத்தில்  துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ளது. மந்திராலயத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது.   மந்திராலயத்திலிருந்து துங்கபத்ரா பாலம் வழியாக செல்வதென்றால், முதல் மாதவரம் சென்று அங்கிருந்து வலப்பக்கம் திரும்பி, ரெய்ச்சூர் செல்லும் வழியில் துங்கபத்ரா பாலத்தை கடந்து கில்லேசுகர் முகாம் வந்து அங்கிருந்து இடப்பக்கம் திரும்பினால் பிச்சாலியை வந்தடையலாம். பாதை பழுது பட்டிருந்தால் பரிசல் வழியாக பிச்சாலி வரலாம்.

எங்களுடன் வந்த திரு.மோகன் சுவாமி  அவர்கள் முன்னரே இங்கெல்லாம் வந்துள்ளார் என்பதால் அவர் துங்கபத்ராவை பரிசல் மூலம் கடந்து அக்கரை சென்று விட்டால் அங்கு ஜீப்கள் கிட்டும் சீக்கிரமாக சென்று விடலாம் என்று கூறினார் நாங்கள் அவ்வாறே சென்று திரும்பினோம். 

 ஏக சிலா பிருந்தாவனம், பிச்சாலி 
பிச்சாலியை தரிசிப்பதற்கு முன்னால் பிச்சாலியின் சிறப்பைக் காண்போமா?  பிட்சாலயா என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் இன்று    பிச்சாலி என்று அழைக்கப்படுகின்றது.  துங்கபத்ரா நதிக்கரையில் இங்கு  ஸ்ரீபாதராயர்  தங்கி தவம், ஜபம் செய்யும் காலத்தில், ஹிரணியனை மடியில் போட்டு வள்ளுகிரால் அவன் மார்பை பிளக்கும் உக்ர நரசிம்ம தேவரை இங்கு பிரதிஷ்டை செய்தார்.  அவர் இங்குள்ள ஜபாடகட்டே என்னும்  கல் மேடையில் அமர்ந்து உபன்யாசம் செய்துள்ளார். ஸ்ரீவியாஸராஜர் ஹனுமன் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கின்றார். ஸ்ரீஜிதாமித்ரர் இங்கு நாக பிரதிஷ்டை செய்துள்ளார். இவ்வாறு பலமகான்களால் புனிதமடைந்த இடம் இந்த பிச்சாலி ஜாபட கட்டே.  இந்த பிச்சாலியில் குருதேவர் பன்னிரண்டு வருடம் தனது சீடரும் நண்பருமான அபர்ணாச்சாரியாருடன் வசித்துள்ளார். 
 
 
ஸ்ரீபாதராஜர்  பிரதிஷ்டை  செய்த உக்ர நரசிம்மர்

இங்குதான் இராகவேந்திரரின் அத்யந்த சிஷ்யரும் நண்பருமான அப்பணாச்சாரியார் வசித்து வந்தார். அவர் மிகச்சிறந்த ஹரி பக்தர், வேத வேதாங்களில் கரை கண்டவர், சம்ஸ்கிருத ஞானி, அபார கருணை கொண்ட ஆசிரியர். இவரது ஞானத்தை பற்றி கேள்விப்பட்டு இவரிடம் சிஷ்யராக இருந்து கல்வி கற்க பாரத தேசமெங்கும் இருந்து எண்ணற்ற மாணவர்கள் வந்து தங்கி கல்வி கற்றனர்  அவர்களுக்கு ஞானதானம் வழங்கி வந்தார் அப்பணாச்சாரியார் . இவர் 300  ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் ஆயினும் அக்கால வழக்கப்படி தனது சிஷ்யர்களுக்கு தானே உணவு அளித்து வந்ததால் வறுமையில் வாடினார். எனவே இவரது சிஷ்யர்கள் உஞ்சவிருத்தி செய்து கொண்டு வந்த அரிசியை ஒரு துணியில் கட்டி துங்கபத்ரா நதியில் நனைத்து  ஆலமரத்தில் கட்டி விடுவார். பாடம் முடிவதற்குள் இவரது யோக சக்தியால்  அது சாதமாகி விடும் அதை சிஷ்யர்களுக்கு அளிப்பார். அவ்வளவு சிறந்த யோகி அவர்.  துங்கபத்ரை நதிக்கரையில் ஆலமரத்தின் அடியில் உள்ள கல்மேடையில்(ஜாபட கட்டே) அமர்ந்து வேதம், உபநிஷத் சாஸ்திரம் ஆகியவற்றை இவர் தன் மாணவர்களுக்கு போதித்து வந்தார்.

பசு மடத்தில் பசுக்கள்

இவ்வாறு அப்பணாச்சாரியார் பிச்சாலியில்  சேவை செய்து வரும் காலத்தில், கும்பகோணத்திலிருந்து இராகவேந்திர சுவாமிகள் ஆதோனி வர முடிவு செய்தார், அதற்காக தனது அருளால் எழுத்தறிவில்லாமல் இருந்து ஞானியான வெங்கண்ணாவிடம் தான் அங்கு வருவதாக செய்தி அனுப்பினார். திவான் வெங்கண்ணாவும் வெகு சிறப்பாக குருதேவரை வரவேற்றார், இராகவேந்திரர் வெங்கண்ணா வீட்டில் மூல இராமருக்கு பூஜை செய்யும் போது நவாப் வந்து மாமிசம் கொடுக்க அதை பழங்களாக மாற்றி அற்புதம் செய்த இராகவேந்திரர் மாஞ்சாலியை பெற்றார். 

 அந்தி சாயும் நேரத்தில் பிச்சாலியில்
துங்கபத்ரையின் அழகு 

இச்சமயம் பிச்சாலிக்கு வந்த குருதேவர் அதன் இயற்கை அழகிலும் , அப்பணாச்சாரியரின் அப்பழுகற்ற  பக்தியாலும் மகிழ்ந்தார். அப்பணாச்சாரியாரும் இராகவேந்திரரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.  துங்காவும் பத்ராவும் சங்கமம் ஆகி துங்கபத்ராவானது போல இராகவேந்திரரும், அப்பணாச்சாரியரும் இனைந்து ஹரி பக்தியை பரப்பினர். குருதேவர் மந்திராலயத்தில்  வசித்து வரும் போது பிச்சாலி வருவார் அவர் கல்மேடையில் அவர்  அமர்ந்திருக்க, அவரது திருப்பாதங்களில் அப்பணாச்சாரியார் அமர்ந்து சேவை செய்வார். இருவரும் பகவத் விஷயத்தில்  ஈடுபடுவர்.  இவ்வாறு 13 வருடங்கள் இருவரும் ஹரி பக்தியை பரப்பி வந்தார்கள். குருதேவர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் நாள் வந்தது, அப்பணாச்சாரியார் இருந்தால் தன்னை  அனுமதிக்க மாட்டார் என்று அறிந்திருந்த இராகவேந்திரார் மத்வசத்சங்கத்திற்கு சென்று வருமாறு அனுப்புகின்றார். மனதில்லையானாலும் செல்லுகின்றார் அப்பண்ணாச்சாரியார்.
இராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்க்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கு ஒரு உரையை ஆற்றினார். அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:
  • சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
  • நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்
  • சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினானும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
  • கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றும் இன்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.
  பின்னர் பிருந்தாவனத்துக்குள் மூச்சை அடக்கி தியானத்தில் ஆழ்ந்தார். அவரது கையில் இருந்த ஜபமாலை நழுவி விழுகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் வெங்கண்ணா கடைசியாக, திறந்திருந்த பகுதியை மூடிவிடுகிறார். இராகவேந்திரர் ஜீவ சமாதி அடையப் போவதை அறிந்ததும் அவரைக் கடைசியாகக் கண்டு விடும் உத்வேகத்தில் ஓடிவருகிறார் அப்பணாச்சாரியார். வழியில் துங்கபத்ரை பொங்கி வழிந்து ஓடுகிறது. அவர் ராகவேந்திரரை மனதில் நினைத்துக்கொண்டு, சமஸ்கிருதத்தில் சுலோகம் பாடிக்கொண்டு, நதியில் இறங்கி  ஓடிவருகிறார். சங்கரர் அழைத்ததும் நதியில் பாதம் பதித்து வந்த பத்மபாதர் போல இக்கரை வந்தார் அப்பணாச்சாரியார்,  அவர் அங்கு வந்த போது பிருந்தாவனத்தின் மேல் கடைக்கல் வைக்கப்பட்டு கொண்டிருந்தது.  ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்துவிடுகிறார். அப்பண்ணாச்சாரியார் பாடிக்கொண்டிருந்த சுலோகத்தில் கடைசி ஏழு எழுத்துகள் மட்டும் பாக்கி இருக்கின்றன. தம்மால் ராகவேந்திரரைப் பார்க்க முடியவில்லையே என்னும் சோகத்தில் அவரது நா  தழுதழுக்கின்றது. ஆனால் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த பிருந்தாவனத்தில் இருந்து ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி என்பதாக அந்த சுலோகம் நிறைவு பெறும் உரத்த ஒலி வெளிவருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் நான் உனக்கு காட்சி தருவேன் என்று வாக்கு கொடுக்கின்றார் இராகவேந்திரர்.
.

 அப்பணாச்சாரியார் இயற்றிய குரு ஸ்லோகம்  
ஸ்ரீ பூர்ணபோத குரு தீர்த்த பயோப்தி பாரா
காமாரிமாக்ஷ விஷமாக்ஷ ஷிரஸ்ப்ருஷந்தி |
பூர்வோத்தராமித தரங்க சரத்ஸுஹம்ஸா
தேவாளி ஸேவித பராங்க்ரி பயோஜலக்னா || (1)


ஜீவேஷ பேத குணபூர்த்தி ஜகத் ஸுஸத்வ
நீசோச்ச பாவ முகநக்ர கணைஸ்ஸமேதா |
துர்வாத்யஜாபதி கிலை: குருராகவேந்திர
வாக்தேவதா ஸரித்மும் விமலீகரோது  || (2)


ஸ்ரீராகவேந்திரஸ் ஸகலப்ரதாதா
ஸ்வபாத கஞ்ஜத்வய பக்தி மத்ப்ய: |
அகாத்ரி ஸம்பேதன த்ருஷ்டி வஜ்ர:
க்ஷமாஸுரேந்த்ரோ: அவதுமாம் ஸதாயம் || (3)


ஸ்ரீராகவேந்த்ரோ ஹரிபாத கஞ்'
நிஷேவணால்லப்த ஸமஸ்த ஸம்பத் |
தேவ ஸ்வபாவோ திவிஜ த்ருமோயம்
இஷ்ட ப்ரதோமே ஸததம் ஸபூயாத்  || (4)


பவ்யஸ்வரூபோ பவதுக்க தூல
ஸங்காக்னிசர்ய: ஸுகதைர்யஷாலி  |
ஸமஸ்த துஷ்டக்ரஹ நிக்ரஹேஷோ
துரத்யயோபப்லவ ஸிந்து ஸேது:  || (5)


நிரஸ்ததோஷோ நிரவத்யவேஷ:
ப்ரத்யர்த்தி மூகத்வ நிதான பாஷ:  |
வித்வத் பரிக்ஞேய மஹாவிஷேஷோ:
வாக்வைகரீ நிர்ஜித பவ்ய ஸேஷ:  || (6)


ஸந்தான ஸம்பத் பரிஸுத்த பக்தி:
விக்யான வாக்தேஹ ஸுபாடவாதீன் தத்வா  |
ஷரீரோத்த ஸமஸ்த தோஷான்
ஹத்வா ஸநோவ்யாத் குருராகவேந்த்ர:  || (7)


யத்பாதோதக ஸஞ்சய: ஸுரநதீ முக்யாபகாஸாதிதா:
ஸங்க்யாநுத்தம புண்ய ஸங்க விலஸத்ப்ரக்யாத புண்யாவஹ:  |
துஸ்தாபத்ரய நாஷனோ புவிமஹா வந்த்யாஸுபுத்ர ப்ரதோ
வ்யங்கஸ்வங்க ஸம்ருத்திதோ க்ரஹமஹா பாபாப ஹஸ்தம் ஷ்ரயே || (8)


யத்பாத கஞ்'ஜரஜஸா பரிபூஷிதாங்கா
யத்பாதபத்ம மதுபாயித மானஸாயே  |
யத்பாதபத்ம பரிகீர்த்தன ஜீர்ண வாச:
தத்தரிஷனம் துரிதகானன தாவபூதம்  || (9)


ஸர்வதந்திர ஸ்வதந்த்ரோஸௌ ஸ்ரீமத்வ மதவர்த்தன 
விஜயீந்த்ர கராப்ஜோத்த சுதீந்த்ர வரபுத்ரக:  || (10)


ஸ்ரீராகவேந்திரோ யதிராட் குருர்மேஸ்யாத் பயாபஹ
ஞானபக்தி சுபுத்ராயு: யஷஸ்ரீ புண்யவர்த்தன:  || (11)


ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேத சின்ஹா தரோ குரு
ஸர்வவித்யா ப்ரவீணோன்யோ ராகவேந்திராந்நவித்யதே  || (12)


அபரோக்ஷீக்ருத ஸ்ரீஷ: ஸமுபேக்ஷித பாவஜ:
அபேக்ஷித ப்ரதாதாந்யோ ராகவேந்திராந்நவித்யதே  || (13)


தயா தாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவ முகாங்கித:
ஷாபானுக்ரஹ ஷக்தோன்யோ ராகவேந்திராந்நவித்யதே  || (14)


அக்யான விஸ்ம்ருதி ப்ராந்தி ஸம்ஷயாப ஸ்ம்ருதிக்ஷயா:
தந்த்ரா கம்பவச: கௌண்ட்ய முகா யே சேந்திரியோத் பவா:  || (15)


தோஷாஸ்தே நஷமாயாந்தி ராகவேந்திர ப்ரஸாதத:
ஓம் ஸ்ரீராகவேந்திராய நம: இத்யஷ்டர்க்ஷர மந்த்ரத:
ஜபிதாத் பாவிதாந்நித்யம் இஷ்டார்த்தாஸ்யு: ஸம்ஷய:  || (16)


ஹந்துந: காயஜான்'தோஷாந் ஆத்மாத்மீய ஸமுத்பவாந்
ஸர்வானபி புமர்த்தாம்ஸ்ச ததாது குருராத்மவித்  || (17)


இதி காலத்ரயேந்நித்யம் ப்ரார்த்தனாம் கரோதி :
இஹா முத்ராப்த ஸர்வேஷ்டோ மோததே நாத்ர ஸம்ஸய:  || (18)


அகம்ய மஹிமா லோகே ராகவேந்திரோ மஹாயஷா:
ஸ்ரீமத்வமத துக்தாப்தி சந்திரோவது ஸதாநக:  || (19)


ஸர்வயாத்ராபலாவாப்த்யை யதாஷக்தி ப்ரதஷிணம்
கரோமி தவஸித்தஸ்ய ப்ருந்தாவன கதம் ஜலம்
ஷிரஸா தாரயாம்யத்ய ஸர்வதீர்த்த பலாப்தயே  || (20)


ஸர்வாபீஷ்டார்த்த ஸித்யர்த்தம் நமஸ்காரம் கரோம் யஹம்
தவஸங்கீர்த்தனம் வேதஷாஸ்திரார்த்த ஞானஸித்தயே  || (21)


ஸம்ஸாரே க்ஷயஸாகரே ப்ரக்ருதிதோகாதே ஸதாதுஸ்தரே
ஸர்வாவத்யஜலக்ரஹைரனுபமை: காமாதிபங்காகுலே  |
நாநாவிப்ரம துப்ரமே அமிதபயஸ்தோமாதி பேனோத்கடே
துக்கோத்க்ருஷ்டவிஷே ஸமுத்தரகுரோ மாம்மக்னரூபம் ஸதா  || (22)


ராகவேந்திரகுருஸ்தோத்திரம் : படேத்பக்தி பூர்வகம்
தஸ்ய குஷ்டாதி ரோகாணாம் நிவ்ருதிஸ்த்வரயாபவேத்  || (23)


அன்'தோபி திவ்யத்ருஷ்டிஸ்யாத் ஏடமூகோபிவாக்பதி:
பூர்ணாயு: பூர்ணஸம்பத்தி: ஸ்தோத்ரஸ்யாஸ்யஜபாத்பவேத்  || (24)


: பிபேத்ஜலமேதேன ஸதோத்ரேணைவாபிமந்திரிதம்
தஸ்ய குக்ஷிகதாதோஷா: ஸர்வே நஷ்யந்திதத்க்ஷ்ணாத்  || (25)




யத்ப்ருந்தாவன மாஸாத்ய பங்கு: கஞ்'ஜோபிவாஜன:
ஸ்தோத்ரேணானேன : குர்யாத்ப்ரதக்ஷிண நமஸ்க்ருதீ
ஜங்காலோபவேதேவ குருராஜ ப்ரஸாதத:  || (26)


ஸோமஸூர்யோ பராகேச புஷ்யார்காதி ஸமாகமே
யோநுத்தமமிதம் ஸ்தோத்ரமஷ்டோத்தரஷதம்ஜபேத்
பூதப்ரேத பிஷாசாதி பீடாதஸ்ய ஜாயதே  || (27)


ஏதத்ஸ்தோத்ரம் ஸமுச்சார்ய குரோர்ப்ருந்தா வனாந்திகே
தீபஸம்யோஜனாத்ஞானம் புத்ரலாபோ பவேத்ருவம்  || (28)


பரவாதி ஜயோதிவ்ய ஞான பக்த்யாதி வர்தனம்
ஸர்வாபீஷ்டப்ரவ்ருத்தி ஸ்யாத் நாத்ரகார்யா விசாரணா  || (29)


ராஜசோரமஹாவ்யாக்ர ஸர்பநக்ராதி பீடனம்
ஜாயதேஸ்ய ஸ்தோத்ரஸ்ய ப்ரபாவான் னாத்ரஸம் ஷய:  || (30)


யோ பக்த்யா குருராகவேந்திரசரணத்வந்த்வம் ஸ்மரன் : படேத்
ஸ்தோத்ரம் திவ்யமிதம் ஸதா ஹி பவேத் தஸ்யா ஸுகம் கிஞ்சன  |
கிந்த்விஷ்டார்த்த ஸம்ருத்திரேவ கமலாநாத ப்ரஸாதோதயாத்
கீர்த்தி: திக்விதிதா விபூதிரதுலா ஸாக்ஷீஹயாஸ் யோத்ரஹி  || (31)


இதி ஸ்ரீராகவேந்திரார்ய குரு ராஜப்ரஸாதத:
க்ருதம் ஸ்தோத்ரமிதம் புண்யம் ஸ்ரீமத்பிர்யப்பணா பிதை:  || (32)


பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே  || (33)



துர்வாதித்வாந்தரவயே வைஷ்ணவேந்தீ வரேந்தவே
ஸ்ரீராகவேந்திர குரவே நமோத்யந்த தயாளவே  || (34)

 பிச்சாலியில் துங்கபத்ரை
அமைதியாக பாயும் அழகு

இராகவேந்திரர் பிருந்தாவனஸ்தர் ஆன பின்னும்  தினமும் பிச்சாலியிலிருந்து மந்திராலயம் வந்து குருதேவரை வணங்கிச்செல்வதை கடமையாக கொண்டிருந்தார்.மழையிலும் வெள்ளத்திலும், துங்கபத்ரையில் தன் நண்பர் அலைந்து திரிவதைக்கண்டு இராகவேந்திரர் பிச்சாலியில் ஜபாட கட்டேயில் ஒரு ஏக சிலா பிருந்தாவனம் அமைக்குமாறும் அங்கு வந்து தான் காட்சி தருவதாகவும் அருளினார். அப்பணாச்சாரியார் அமைத்த ஏல சிலா பிருந்தாவனத்தில் ஜோதி ரூபத்தில் காட்சி அளித்தார் குருதேவர். இவ்வாறு பல சிறப்புக்கள் கொண்ட பிச்சாலியை அடுத்த பதிவில் தரிசனம் செய்யலாமா அன்பர்களே.   

அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு (2012) நல்வாழ்த்துக்கள்.

சென்ற வருடம் ஜனவரி முதல் நாளன்று நவ பிருந்தாவனம் தரிசனம் செய்து மந்திராலயத்திற்கு புறப்ப்ட்டோம். இந்த ஆண்டு முதல் நாள் அன்பர்களாகிய தங்களுடன் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.  

Labels: , , ,