Sunday, March 18, 2012

திருவேங்கடமுடையான் இரத சப்தமி சூரிய பிரபை வாகன சேவை-1

Visit BlogAdda.com to discover Indian blogs
இரத சப்தமி 

இரதசப்தமிக்கான சிறப்பு அலங்காரம் 

தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது.   ஒரு வருடமானது சூரியனது  இயக்கத்தை அடிப்படையாக  இரண்டு அயனங்களாக  பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் வடக்கு நோக்கி நகரும் தைமாதம் முதல் நாள் முதல் ஆனி மாதம் நிறைவு நாள் வரையான காலம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகின்றது. கோவில் கும்பாபிஷேகம் முதலான புண்ணிய காரியங்களுக்கும். கல்யாணம் முதலிய சுப நிகழ்ச்சிகளுக்கும் உகந்த காலம். மறுமைப் பேறு, நற்கதி அடையவும் உகந்த காலம், வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருக்கும் காலம் என்பது ஐதீகம். உத்தராயணத்தின் முதல் நாள் மகர சங்கராந்தி தலை சிறந்த புண்ணிய நாள். யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சபதம் செய்து காலம் முழுவதும் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழ்ந்த பீஷ்ம பிதாமகர், தம் தந்தை அளித்த வரத்தின் படி மோக்ஷம் பெற காத்திருந்த காலம் உத்தராயண புண்ணிய காலம்.

ஆனந்த நிலைய விமானம்

 சந்த்ரமானம் எனப்படும் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட பஞ்சாங்கங்களில் மாதத்தின் முதல் நாள் அமாவாசை அல்லது பிரதமையன்று ஆரம்பம் ஆகும். அதற்கடுத்த ஏழாவது நாளே சப்தமி ஆகும்.    சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை, “சப்தமி திதி’ என்கிறோம். தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி.   தை அமாவாசையன்று ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின்  வடக்கு நோக்கிய பயணம் துவங்குகிறது. ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. இந்தப் பூமி சுழல்வதை நினைவு படுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது. காலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது என்றும் சொல்லுவதுண்டு. பொதுவாகவே சப்தமி திதியை சூரியனுக்கே உரித்தானதென்று சொன்னாலும், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசம் ஆனதின் பின்னர் வரும் வளர்பிறை சப்தமி திதியை சூரியனின் சுற்றும் சக்கரமான காலச்சக்கரத்தின் பெயராலும், ரதத்தின் பெயராலும் ரதசப்தமி என்றே அழைப்பார்கள்.

இன்றைய தினத்தில் பெருமாள் சூரியனுக்கு அருளும் விதமாக  காலை முதல் இரவு வரை ஏழு வாகனங்களில் சேவை சாதித்து அருளுகின்றார். இப்பதிவிலிருந்து அந்த சேவைகளை கண்டு மகிழுங்கள் அன்பர்களே.

சூரிய உதயத்திற்கு முன்னரே சூரியனுக்கு 
அருள் புரிய புறப்பட்ட மலையப்ப சுவாமி


பின்னழகு




கிருஷ்ணனுக்கு சேவை புரியும் கோபிகைகள்


 
மாட வீதியின் தென்மேற்கு மூலையில் 
சூரிய உதயத்தின் போது தீபாராதனை

தீபாராதனையை சேவிக்கும் பக்தர்கள்



 சூரியனுக்கு அருளிய மலையப்ப சுவாமி 

னைத்துயிர்க்கும் அமுது படைக்கும் 
திருமலையானுக்கே அமுது படைக்கும்  அன்னை

சூரியனுக்குரிய சிவப்பு மாலையுடன் தங்க சூரிய பிரபா வாகனத்தில்
 மலையப்ப சுவாமி பவனி வரும் அற்புத காட்சி
சூரிய பிரபை பின்னழகு 

பன்னிரெண்டு  வருடங்களுக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக்கிழமை திருவேங்கடமுடையானை  தரிசிக்கலாம் என்று திருமலை புறப்பட்டி சென்றேன். மலையெங்கும் ஒரே மக்கள் வெள்ளம், அப்போது  சிறப்பு தரிசன டிக்கெட் வராஹ சுவாமி ஆலயத்திற்கு எதிரே கொடுக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. அங்கு சென்று பார்த்த போது சன்னல் அடைக்கப்பட்டிருந்து. 24 மணி நேரத்திற்கு டிக்கெட் இல்லை எம்று கூறி விட்டனர். சரி ஏழுமலையானை தரிசனம் செய்யும் பாக்கியம் நமக்கு இல்லை என்று மனதை கல்லாக்கிக்கொண்டு  திரும்பி வரலாம் என்று வரும் போது சகஸ்ரதீபாலங்கார மண்டபத்தின் சமீபம் வந்த போது மாட வீதியின் கோடியில் ஏதோ  பெரும்  கூட்டம் கண்ணில் பட்டது, ஆவலுடன் என்ன கூட்டம் என்று சென்று பார்த்தபோது  என்ன ஒரு ஆச்சரியம் மலையப்பசுவாமி ஹனுமந்த வாகனத்தில் சேவை சாதித்துக்கொண்டு திருவீதி வலம் வந்து கொண்டிருந்தார். ஸ்ரீநிவாசப்பெருமாளே என்னே உனது கருணை, நீயாக வெளியே வந்து சேவை சாதிக்கின்றாயே என்று மனமுருகி அவரை சேவித்து அவர் கூடவே திருவீதி வலம் வந்தேன். பின்னர் விசாரித்த போது அன்றைய தினம் இரதசப்தமி, பெருமாள்    ஏழு வாகனங்களில் சேவை சாதிப்பார். அந்த வருடம் இரத சப்தமி சூரியனுக்குரிய ஞாயிற்ருக்கிழமையில் வந்துள்ளதால் இன்னும் கூட்டம் அதிகம் என்று அறிந்து கொண்டேன்.  மேலும் அன்றைய தினம் கற்பக விருட்ச வாகன(பழைய) சேவையையும் சேவித்து விட்டு திரும்பி வந்தேன்.

அப்போதே மனதில் ஏதாவது ஒரு வருடம் ஏழு சேவைகளையும் கண்டு களிக்க வேண்தும் என்ற ஆவல் தோன்றியது. நடுவில் ஒரு வருடம் இரதசப்தமியன்று திருமலை செல்லும் வாய்ப்புக்கிட்டியது, ஆனால் அன்றைய தினம்  காலை சென்னையில் இருந்து கிளம்பி சென்று  முடிந்த வரை வாகன சேவையும் மூலவரையும் சேவித்து வரலாம் என்று சென்றேன்.  அன்று கருட சேவையையும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.

 அதற்கப்புறம் இந்த வருடம் இரதசப்தமி  முழு நாள் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. மூலவர் தரிசனத்தை முதல் நாளே முடித்துக்கொண்டோம். வைர கிரீடத்துடனும், வைர காப்பில் அற்புதமாக சேவை தந்தார் திருமலையப்பன். கொடிமரத்தின் அருகில் அற்புதமான அலங்காரத்தையும் காணமுடிந்தது.  அந்த வாகன சேவைகளை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவுகள், இத்துடன் இரத சப்தமி பற்றிய , அறிந்த  படித்த பல செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறேன். கூடவே  வேங்கடேச சுப்ரபாதத்தின் மங்களாசாசன ஸ்லோகங்களையும் பொருளுடன் காணலாம் வாருங்கள் அன்பர்களே.




ஸ்ரீ: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்திநாம் |
ஸ்ரீ வேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்||   (1)

ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் மணாளனும், நன்மைகளுக்கு இருப்பிடமும், யாசகர்களுக்கு நிதியும், திருவேங்கடத்து உறைபவனுமான  ஸ்ரீநிவாஸனுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்,  ஒரு குறைவுமின்றி அவ்வெம்பெருமான் எழுந்தருளியிருக்கும் வரைதான் நாம் எல்லா மங்களங்களையும் அடைய முடியும். கோரிய பலன்களை குறைவின்றிப் பெற முடியும்.  

லக்ஷ்மீ ஸ்விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே |
சக்ஷுஷே  ஸர்வலோகாநாம்  வேங்கடேசாய மங்களம் || (2)

கமலையும் கண்டு  காமுறக்கூடிய அழகிய புருவங்களுடன் கூடிய  கண்ணழகு  படைத்த திருவேங்கடமுடையான், உண்மையில்  உலகோர்க்குக் கண்ணாயிருக்கின்றான்.  கண்ணில்லையேல் உலகம் இருண்டு விடும் என்பதை நாமறிவோம் அது போலவே கடவுள் இல்லையெனினும் உலகம் அழிந்து விடும், ஆதலால் கடவுளின் கடவுளாகிய  திருவேங்கடமுடையானுக்கு  எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

இரத சப்தமி சேவைகள் தொடரும்.........

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home